கலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண
விவரங்களை வெளியிடுவதுடன், அதைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவர்களிடம் பெறுவது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான "நீட்' தகுதித் தேர்வு முடிவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, தாமதமாகி வந்த இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்பை (எம்.பி.பி.எஸ்.) வழங்கும் 34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அவசர உத்தரவு ஒன்றை யுஜிசி பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு 34 நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு, சுகாதாரப் பணிகளுக்கான இயக்குநரகம் (டி.ஜி.ஹெச்.எஸ்.) சார்பில் நடத்தப்படும். இதில் மொழிச் சிறுபான்மை மற்றும் மதச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் சேர்த்துக் கொள்ளப்படும்.
Comments
Post a Comment