விளை நிலங்களில் வீடு கட்ட விவசாய அதிகாரி சான்று அவசியம்
திண்டுக்கல்: விளைநிலங்களில் வீடுகட்ட விவசாய அதிகாரியின் தடையின்மை சான்று அவசியம் என பத்திரபதிவுத் துறை, வருவாய் துறையினருக்கு புதிய பதிவு நடைமுறை குறித்த பரிந்துரைகளை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து 10ஆண்டுகள் : சாகுபடிக்கு உகந்த நிலம் இல்லை என தெரியவந்தால், அந்த நிலத்தை வீட்டுமனைகளாக விற்பனை செய்வது நடைமுறையில் இருக்கிறது. அந்த நிலங்களை வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த் துறையினர் மூலம் 'சிட்டா அடங்கல்' விபரங்களை வைத்து விற்பனை செய்வதும் நடந்தேறின.மத்திய அரசின் 'நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டுத் திட்டம்' மூலம் விவசாயிகளின் சாகுபடி திறன்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விளைநிலங்கள் மனைகளாக மாறுவதை தடுத்து நிறுத்த, புதிய பதிவு வரைமுறைகளை மத்திய வேளாண் அமைச்சகம் வகுத்தது.அதன்பின் மத்திய அரசு இந்தத் திட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்தியது. தற்போது தமிழக அரசின் ஒப்புதலின்பேரில் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்கள், மாவட்ட வேளாண் துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், விளை நிலங்களை விற்பனை செய்வதற்கு, வேளாண் இணை இயக்குனர் அல்லது அதற்கு இணையான தொழில்நுட்ப அலுவலரின் தடையின்மை சான்றிதழ் பெறுவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தடையின்மை சான்றிதழ் வழங்க, ஒருசில வரைமுறைகளை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.முக்கியமாக பூர்வகுடி மக்களின் (பழங்குடியினர்) விளைநிலங்களில் சாகுபடி தன்மை குறைவது கண்டறியப்பட்டால், அந்த மண்ணின் முழு திறன்கள் (கார,அமில தன்மை விபரங்களின் பட்டியல்) பெற்று, அரசின் ஒப்புதல் பெற்ற பின்பே தடையின்மை சான்றிதழை வேளாண் இணை இயக்குனர் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண் உதவி அலுவலர் ஒருவர் கூறியதாவது: இந்த மாதிரியான நடைமுறைகள் பதிவுத்துறையில் வகுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 76 சதவீத விளைநிலங்கள் 'கான்கிரீட்' கட்டடங்களாக உருமாறி விட்டன. மீதியுள்ள விளைநிலங்களை காப்பாற்ற இந்த
உத்தரவு நன்மை பயக்கும் என்றார்.
Comments
Post a Comment