ஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..!

ஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..! #Kiddle

குழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமானது குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்க கூடாது என்பதுதான். மூன்று வயதுள்ள குழந்தைகள் தொடங்கி பத்து வயதுள்ள குழந்தைகள் வரை மொபைல் மற்றும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகம். 
அடம் பிடிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக குழந்தைகளிடம் மொபைல் போனைக் கொடுப்பது அவர்களின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வீடியோ கேம்ஸில் ஆரம்பித்து இணையத்தில் தேடுவது வரை இணையத்தில் நினைத்து பார்க்க முடியாத ஆபத்துகளும், நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைத்தான் கொடுக்கிறோமா?தன்னுடைய குழந்தை மொபைல் வைத்திருக்கிறது என்பதை பெற்றோர் ஒரு வித கெளரவமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான்கு வயது குழந்தையின் அப்பா ஒருவர் பேசும் போது "என்னோட பையன் மொபைலை கைல குடுத்தா தான் அமைதியா இருக்கான், நா எப்போ வீட்டுக்கு வருவேன்னு பாத்துட்டே இருப்பான், அப்பாவ எதிர்பார்த்து இல்ல, என்னோட மொபைலை எதிர்பார்த்து, நாபோனதும் மொதல்ல மொபைலை வாங்கிடுவான், அதுலயே தான் இருக்கான், எனக்கு தெரியாத எது எதையோ கண்டு பிடிச்சு சொல்றான், எனக்கே ஆச்சர்யமா இருக்கும்" என்கிறார் பெருமையாக.அனேக வீடுகளில் இணையதள சுதந்திரம் என்பது வரையறுக்கப்படாததாகவே இருக்கிறது. பெற்றோர், ஆசிரியரிடம் கேட்கத் தயங்குகிற சில விஷயங்களை இப்போதெல்லாம் குழந்தைகள், நேராக இணையத்தில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இணையத்தை தேடிப் போகிற குழந்தைகள் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம் பார்ப்பது, அதைப் பற்றி சிந்திப்பது எல்லாம் உளவியல் ரீதியாக குழந்தைகளுக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தைகளிடமிருந்து இணையத்தையும் மொபைலையும் பிரிக்க முடியாது எனும்போது அவர்களின் எதிர்காலம் கருதி என்னவெல்லாம்செய்யலாம், அதிலிருந்து எப்படி குழந்தைகளை மீட்பது என யோசிக்கிற பெற்றோர்களுக்காகவே வந்திருப்பதுதான் கிடில் (Kiddle)மற்ற சர்ச் எஞ்சின்களில் நாம் எதைத் தேடினாலும் அந்தப்பக்கங்களில் தேவை இல்லாத ஒரு தளத்தின் பாப் அப் வந்துவிடுகிறது.

தவறுதலாக அப்பக்கங்களை தொட்டு விட்டால் அவை ஆபாச பக்கங்களுக்கோ விளம்பர பக்கங்களுக்கோ கொண்டு சென்று விடுகிறது. அப்படி எந்தஇடையூறுகளும் இல்லாத, குழந்தைகளின் உலகத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதை மட்டும் கருத்தில்கொண்டு கூகுள் வடிவமைத்திருக்கிற சர்ச் எஞ்சின்தான் "கிடில்". கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு , சினிமா, அரசியல் எனஎதைப் பற்றி தேடினாலும் ஆபாசங்கள் இல்லாத பயனுள்ள தகவல்களை மட்டுமே தருகிறது கிடில். குழந்தைகளுக்காக சிறந்த எடிட்டர்களைக்கொண்டு ஆக்கபூர்வமான விஷயங்களைமட்டும் பதிவேற்றுகிறது. குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக செய்திகளோடு படங்களையும் இணைத்திருக்கிறது கிடில். கிடிலின் ஸ்லோகனாக"விசுவல் சர்ச் எஞ்சின்" என அடை மொழி வைத்திருக்கிறார்கள்.

kiddle - கிடில்

ஆபாச வலைத்தளங்களுக்கு அழைத்துச் செல்லும் எந்த பெயரை டைப் செய்தாலும் நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறது கிடில். உதாரணத்துக்கு சினிமா சார்ந்த விஷயங்களை தேடினால் ஆபாசங்கள் இல்லாத பயோடேட்டாக்களை மட்டுமே காட்டுகிறது. கார் என்று தேடினால் கார்கள் பற்றிய தகவல்களுடன் கார் பற்றிய பாடல்கள், கட்டுரைகள் என குழந்தைகளின் பயணம் பற்றிய விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது.

எல்லாத் தேடல்களிலும் எதிர்மறையான விஷயங்களை தவிர்த்து நேர்மறையான விஷயங்களை மட்டுமே அள்ளி வந்து தருகிறது கிடில்.மொபைலில் கிடில் சர்ச் எஞ்சினை அப்டேட் செய்து விட்டு குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் தவறான பல தளங்களுக்கு செல்வது கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு மொபைலையோ கணினியையோ கொடுத்து விட்டு தைரியமாக இருக்கலாம். ஆனால், அவ்வப்போது அவர்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம், நவீன அப்டேட் காலத்தில் நமக்கு தெரியாத பல விஷயங்களை குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)