நாம் வாங்கும் பால் தரமானதா? வீட்டிலேயே பரிசோதிக்கும் வழிமுறைகள்
நாம் வாங்கும் பால் தரமானதா? அது பால்தானா என்பதை வீட்டிலேயே எளிய முறையில் பரிசோதிக்கும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் பாலின் தரத்தை அறிய பால் தரப்பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் பாலைக் கொண்டு வந்து தரத்தை அறிந்து செல்கின்றன.
நமக்கு அந்த வசதி இல்லையே ஏங்குபவர்களுக்கு உணவு பொருள் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பாலின் தரத்தை வீட்டிலேயே எளிதாக அறியும் வழிமுறைகளை தொலைக்காட்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.
அதாவது முதல் சோதனை,
பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய - பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம். பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம். இதில் ஒரே ஒரு ஆறுதல் பாலில் தண்ணீர் கலந்தால் நமக்கு பண இழப்பு தானே தவிர, உடலுக்கு ஒரு கெடுதலும் இல்லை. அதில்லாமல் தற்போது பால் விலைக்கு ஏற்ப தண்ணீரும் விற்பதால் அதிக நஷ்டம் இல்லை என்றும் ஆறுதல் கொள்ளலாம்.
பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால் - இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
டிஞ்சர் இல்லாமலும் இதனை சோதிக்கலாம். அதாவது, வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்கும். ஆனால் மாவு கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடும்.
சோப்புத்தூள் கலந்திருந்தால்?
பால் பொங்கும் போது அதிகம் நுரை வருவதற்காக அதில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதையும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதாவது ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால் நுரை வரும். வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும். ஆனால், சோப்புத் தூள் கலந்த பாலாக இருப்பின் அந்த நுரை போகாது. அப்படியே இருக்கும். பால் கொதிக்கும் போது அதிகமாக நுரை வந்தாலும் அதில் சோப்புத் தூள் கலக்கப்பட்டிருக்கலாம் என்பதை அறியுங்கள்.
சுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால், கலப்பட பால் திரியாது.
பாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாம். பிஎச் காகிதம் என்று கேட்டால் தற்போது பல கடைகளில் கிடைக்கிறது. சிறிய காகிதத் துண்டுகள் போல இருக்கும். அதில் அளவீடுகளும் இருக்கும்.
ஒரு பாலை இந்த பிஎச் காகிதம் கொண்டு பரிசோதித்தால், அது பிஎச் 6.5 என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது 6.4 ஆகவும் இருக்கலாம். 6க்கும் குறைவாக இருந்தால் நிச்சயம் அது அமிலம் கலந்த பாலாக இருக்கலாம்.
ஒரு சிறிய டம்ளரில் பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காகிதம் பச்சை நிறமாக மாறினால் அது நல்ல பால். அதுவே, மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் என்பதை உறுதி செய்யலாம் என்று கூறுகிறார்கள்.
Comments
Post a Comment