ஆன்லைன் மூலம் பணம் திருட்டு...கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள்..!
சென்னை எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளார்களின் கணக்கில் இருந்து மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலம் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னையில் பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து வங்கியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகளை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்தினார் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்.
அதில் 2016-ம் ஆண்டிலும், கடந்த 6 மாத காலத்திலும் சென்னையில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்தும், ஓடிபி எண்ணை திருடியும் ஆன்லைன் மோசடிக்கும்பல் லட்சக்கணக்கில் பணம் திருடுவதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது காவல்துறை. வங்கிகளின் பணபரிவர்த்தனையில் உள்ள பாதுகாப்பு குறைபாடே இத்தகைய சம்பவங்கள் தொடர காரணம் என்றும் சுட்டிக்காட்டினர். கடந்த 6 மாதங்களில் சென்னையில் வங்கி வாடிக்கையாளர்கள் பறிகொடுத்த தொகை குறித்த விபரங்களைகாவல்துறையினர் பட்டியலாக தயாரித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் வழங்கினர்.
அதில் 547 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 3 கோடியே 37 லட்சம் ரூபாயை பறிகொடுத்து பாதுகாப்பு குறைபாடுள்ள வங்கிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்றழைக்கப்படும் எஸ்.பி.ஐ வங்கி. அதனை தொடர்ந்து இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் 284 பேர் 35 லட்சம் ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 83 பேர் 82 லட்சம் ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் 107 பேர் 54 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 78 பேர் 30 லட்சம் ரூபாயும் பறிகொடுத்து தாங்களும் பாதுகாப்பு குறைபாடுள்ள வங்கிகள் தான் என்ற அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் மொத்தம் 34 வங்கிகளின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன.
அதே போல கடந்த 6 மாதங்களில் கிரெடிக் கார்டு மோசடியால் 209 பேரும், டெபிட்கார்டு மோசடியால் 1106 பேரும், அன்லைன் மோசடியால் 175 பேரும், பகிரப்பட்ட ஓ.டி.பியை திருடிய மோசடியால் 1315 பேரும், ஓ.டி.பியை வாடிக்கையாளருக்கே தெரியாமல் திருடிய மோசடியால் 175 பேரும் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 7 கோடியே 15,98,058 ரூபாயை பறி கொடுத்துள்ளனர். இவர்களில் 9% வாடிக்கையாளர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது தெரிந்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.
பெரும்பாலான வங்கிகள் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் பணபரிவர்த்தனையில் பாதுகாப்பான நடைமுறையை பின்பற்றுவதில்லை என்பதை இந்த பட்டியல் உணர்த்துகிறது. அதே வேளையில் அனைத்து வங்கிகளும் இணைந்து வாடிக்கையாளரின் நலன் காக்கும் பொருட்டு, ரிசர்வங்கியின் ஒப்புதலுடன் இரண்டடுக்கு பாதுகாப்புடன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் புதிய முறையை கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாற்றமாவது பணத்தை காப்பாற்றுமா..என்பதே அனைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments
Post a Comment