அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாய மாக்கக் கூடாது?
என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கங் கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகி கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி:
தனியார் பள்ளிகளை நாடுவதற்கான முதல் காரணம் சமூக அந்தஸ்து. அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளை கள் படித்தால் கவுரவ குறைச்சல் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த நிலைமை மாறி வருகிறது. தனியார் பள்ளிகளைப் போன்று அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதேநேரத்தில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின்படி குழந்தைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன்:
அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பாக அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று விதி கொண்டுவரலாம். தலைமைச் செயலர், அரசு செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் இது பொருந்தும்.ஒரு எம்எல்ஏ தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்தால் நிச்சயம் அடிக்கடி அந்த பள்ளிக்குச் சென்று பார்ப்பார்.இதன் காரணமாக அரசு பள்ளி மீதான கவனம் தானாகவே அதிகரிக்கும்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலப்பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்:
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயாராக இருக்கிறார்கள். எம்பி, எம்எல்ஏக்களும் அரசு ஊழியர்கள்தான். அவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கட்டும். ஒரு மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்கிறார் என்றால் அந்த பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சரியாகிவிடும். அரசு பள்ளி ஆசிரியர்களை கல்விப்பணி தவிர்த்து ஆதார் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, சான்றிதழ் வாங்கிக் கொடுப்பது போன்ற இதர வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது.
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்கள் இப்போதில் இருந்து தீர்மானிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசு பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் முக்கியத்துவம் கொடுத்து 100 சதவீத இடத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் எம்.அன்பரசு:
அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காததற்கு பல காரணங்கள் இருக்கும். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது உள் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்கள் இருக்கலாம்.
Comments
Post a Comment