2019 மார்சுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8.5 லட்சம் ஆசிரியர்களுக்கு கெடு
நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ள
து.
இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. கல்வி உரிமை சட்டத் திருத்த மசோதா 2017 குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் நேற்று கூறியதாவது: கடந்த 2009-ம்ஆண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த 2010 ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி 14 வயதுக்கு உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டது.
மேலும் இச்சட்டத்தின்படி ஆசிரியருக் கான கல்வித் தகுதியைப் பெறாதவர்கள் 5 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் சுமார் 6 லட்சம் ஆசிரியர்களும் அரசு பள்ளிகளில் 2.5 லட்சம் ஆசிரியர்களும் போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றுகின்றனர். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத் திருத்த மசோதா 2017-ன்படி வரும் 2019-ம் ஆண்டுக்குள் அவர்கள் அனைவரும் ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment