தொலைதூர பகுதிக்கு கல்வி வழங்க 2 திட்டங்களை துவக்கினார் பிரணாப்
தொழில்நுட்ப உதவியுடன், நாட்டின் தொலைதுாரப் பகுதிகளுக்கும் கல்வியை எடுத்துச் செல்லும் நோக்கில், இரண்டு புதிய திட்டங்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று துவக்கி வைத்தார்.
எல்லாருக்கும் கல்வி கிடைக்கும் வகையிலும், தொலைதுாரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த கல்வி வழங்கும் வகையிலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, ஸ்வயம், ஸ்வயம் பிரபா ஆகிய இரண்டு திட்டங்களை தீட்டி உள்ளது.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த இரு திட்டங்களையும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்தார். மேலும், தேசிய கல்வி களஞ்சியம் என்ற, டிஜிட்டல் திட்டத்தையும், அவர் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சரிபார்க்கப்பட்ட அனைத்து கல்வி தொடர்பான ஆவணங்களும், டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வைக்கப்படும். இதன் மூலம், மோசடிகளை தடுக்க முடியும். ஸ்வயம் திட்டத்தின் கீழ், டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம், இணையவழியில் பாடங்கள் நடத்தப்படும். கல்வி தொடர்பான ஆவணங்கள், வீடியோவாக, கிடைக்க வழி வகை செய்யப்படும். இந்த வீடியோக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்வயம் பிரபா திட்டத்தின் கீழ், டி.டி.எச்., எனப்படும் நேரடியாக வீட்டுக்கு சேவை வழங்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதில், 1,500 ரூபாய் செலவில், 'டிஷ் ஆன்டெனா'வை வீட்டில் பொருத்த வேண்டும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கும், கல்வி தொடர்பான, 32 சேனல்களை இதன் மூலம் இலவசமாக பார்க்க முடியும்.
ஒவ்வொரு நாளும், கல்வி தொடர்பான நிகழ்ச்சி, நான்கு மணி நேரத்துக்கு தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகும். அன்றைய தினம் முழுவதும், அதே நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகும்.
Comments
Post a Comment