"8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் ரத்து... தமிழகத்துக்கு செல்லாது!" - கல்வியாளர் விளக்கம்


     நாளொரு அறிவிப்பு பொழுதொரு அரசாணைகளாக நடக்கிறது மத்திய, மாநில ஆட்சிகள்.      நேற்றுதான் ரயில்வே பயணச்சீட்டு எடு
க்கும் போது 'மானியம் வேண்டுமா, வேண்டாமா ?' எனப் பயணிகளிடம் கேட்கப்படும் என்றும், அப்படி பயணிகள் விரும்பினால் தங்கள் மானியத்தை 50 முதல் 100 சதவிகிதம் வரை விட்டுக்கொடுக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இன்று வெளியான மற்றொரு செய்தியில் வரவிருக்கும் புதிய கல்விக்கொள்கையில் தற்போதிருக்கும் 8-ம் வகுப்பு வரையிலான முழுத்தேர்வு முறையினை ரத்து செய்யப்போவதாக மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு இருந்தாலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகளுக்குக்கூட எழுதப்படிக்கத் தெரியவில்லை என்று புகார் கிளம்பியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து 'ஆல் பாஸ்' முடிவை நீக்கும் கோரிக்கை வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களிடம் இந்த முடிவு குறித்து கேட்டோம்.
"ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சராக இருக்கும் போதே 'மத்திய அரசின் இந்த முடிவை ஏற்கமுடியாது' என்று அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்பைத் தமிழக அமைச்சரவையைக் கூட்டியே எடுத்தார். அது மட்டுமல்லாது 64-வது மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கேட் மீட்டிங்கில் அன்றைய தமிழக கல்வி அமைச்சர் மாஃபா பான்டியராஜன் தமிழகத்தின் கல்வியின் தரமும் மாணவர்களின் தரமும் சிறப்பாக உள்ளது. இப்படி ஒரு முடிவை அமுல்படுத்தினால் எங்கள் மாநில மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, மாணவியர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படும்' என்று இந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்தார். அதன் பின்னர் நடந்த கூட்டத்தின் இறுதியில் இந்தப் பிரச்னையில் 8-ம் வகுப்பு ஆல் பாஸ் என்பதை மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பிரகாஷ் ஜாவேடேக்கர் தெரிவித்தார்.
எனவே தற்போது இணை அமைச்சர் மகேந்திர பாண்டே அறிவித்துள்ளது தமிழக அரசுக்குப் பொருந்தாது. எனவே ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டை தற்போதைய தமிழக அரசு மாற்றக்கூடாது. ஏற்கனவே எடுத்த முடிவில் கறாராக இருக்கவேண்டும். இந்திய அளவில் பிறமாநிலங்களில் இந்த முடிவு எடுப்பதுமே அந்த மாநிலக் குழந்தைகளின் கல்வியை வெகுவாக பாதிக்கும். மற்ற நாடுகளில் அரசு பள்ளிகளை நடத்துகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கல்வியைச் சந்தையிடம் ஒப்படைக்கிறார்கள். ஒரு குழந்தை ஒவ்வொரு பழக்கத்தையும் பெற்றோரிடத்தில் இருந்து கற்றுக்கொள்கிறது. பல் துலக்குவதிலிருந்து சாப்பிடுவது, உறங்குவது வரை ஒவ்வொன்றாகப் பெற்றோரிடம் கற்றுக்கொள்ளும் குழந்தை ஆசிரியரிடம் இருந்து எப்படிக் கற்றுக்கொள்ளாமல் போகும்? அந்தப் பொறுப்பை ஆசிரியர்களுக்கு உருவாக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் பணியைத்தவிர வேறு எந்த வேலையையும் வழங்கக்கூடாது. ஆசிரியர்களுக்குக் கற்பித்தலைத் தாண்டி வேறு பணிகளைக் கொடுத்துவிட்டு பிள்ளைகளை பழிவாங்கினால் எப்படி? இதில் பிற மாநிலங்களில் இருந்து கேட்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பிற மாநில அமைச்சர்கள் முடிவு செய்தார்களா அல்லது கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்தார்களா என்பதை முதலில் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டு எடுத்த முடிவை அப்பாவி மாணவர்கள் மீது எப்படித் திணிக்க முடியும்? இது எப்படியானாலும் இந்த முடிவு தமிழகத்துக்கு பொருந்தாது என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையைத் தமிழக அரசுதான் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)