ஏடிஎம்மில் பணம் எடுப்பது முதல் லோன் ஈஎம்ஐ வரை... ஜிஎஸ்டியால் திணறல்
ஜிஎஸ்டி வரியால் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சேவை வரியானது 15 சதவிகிதத்திற்கு பதிலாக தற்போது 18 சதவிகிதம் வசூலிக்கப்படுகின்றது.
சரக்கு மற்றும் சேவை வரியால் சாமானியர்களும் எளிதில் பாதிக்கும் முக்கியத் துறையாக வங்கித்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கித்துறைகளுக்கான வரி முன்பைவிட ஜிஎஸ்டியில் கூடுதலாக உள்ளதே இதற்குக் காரணம்.
ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் உள்ள இலவச வரம்பிற்கு அப்பார்பட்டு பணம் எடுக்கும்போது செலுத்தும் சேவை வரியானது அதிகரித்துள்ளது.
இந்திய சுதந்திரத்திற்கு பின்பு மிகப்பெரிய வரிச் சீர்திருத்த முறையான ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையானது கடந்த 1ஆம் தேதி அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தற்போது நாட்டின் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தங்களின் சரக்கு மற்றும் சேவை வரிகளை செலுத்த தொடங்கி உள்ளனர்.
அதுபோலவே நிதிச் சேவை அளிக்கும் நிறுவனங்களான, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், முகமைகள் போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிகளை செலுத்த தொடங்கி உள்ளனர்.
இதில் சேவை வரியானது மத்திய சுங்கம் மற்றும் கலால் வரிகள் துறை வகுத்துள்ள கொள்கைகளின் படி வரிகளை வசூலித்து வருகின்றது.
தற்போது சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், மத்திய சுங்க வரிகள் துறையானது சேவை வரிகள் குறித்து ஒரு தெளிவான வரையறையோ விதிவிலக்கு பட்டியலையோ இதுவரை அளிக்கவில்லை.
இதனால், கடந்த மாதம் வரையிலும், 15 சதவிகிதம் வரையில் வசூலிக்கப்பட்டு வந்த சேவை வரியானது சரக்கு மற்றும் சேவை வரிகளின் கீழ் 18 சதவிகிதமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், நுகர்வோர் வங்கி ஏடிஎம், காப்பீடு மற்றும் பரஸ்பர நிநி நிறுவனங்களின் நிதிச் சேவைகளை பெறுவதற்கு கூடுதலாக 3 சதவிகித வரியினை அளிக்க வேண்டும். இதன்மூலம் கூடுதலான நுகர்வோர் நிதிச்சுமையினை ஏற்கவேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்பு ஏற்பட்ட ரொக்கப் பணத் தட்டுப்பாட்டால் டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்தது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பில் வங்கிச்சேவை, நிதிச்சேவை ஆகியவற்றுக்கு 18 சதவிகிதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்தச் சேவைகளுக்கு 15 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வங்கிச்சேவை, நிதிச்சேவை, இன்ஷூரன்ஸ் கட்டணம், கிரெடிட் கார்டு கட்டணம் ஆகியவை முன்பைவிட அதிகரிக்கும். முன்பு இருந்ததைவிட 3 சதவிகிதம் அதிகமான வரியைச் செலுத்த வேண்டியதிருக்கும். இதனால் டிஜிட்டல் பரிமாற்றங்கள் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டியில் மேற்கண்ட சேவைக் கட்டணங்களுக்கு வரி உயர்வது குறித்து பெரும்பாலான வங்கிகள் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு எம்எம்எஸ் மூலம் தகவல் தெரிவித்துவிட்டன. ஜிஎஸ்டியில் வங்கிச்சேவையைப் பொறுத்தவரை, ஏடிஎம்களில் கட்டணமின்றி பணம் எடுக்கும் முறைக்கு மேல் அதிகமாக எடுத்தால் 18 சதவிகிதம் சேவை வரி செலுத்த வேண்டும்.
மேலும், பணம் அனுப்புதல், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கான சேவை, வீட்டுக்கடன் செயல்பாட்டுக் கட்டணம், வங்கி லாக்கருக்கான கட்டணம், காசோலை, வரைவோலை, பாஸ்புக் பிரதி ஆகியவை பெறுவதற்கான கட்டணம், பில் கட்டணம், செக் கலெக்ஷனில் போடுதல், பணம் கையாளும் கட்டணம், எம்எம்எஸ் அலர்ட் ஆகியவற்றுக்கும் கட்டணம் அதிகரிக்கிறது.
இருந்தாலும் கூடுதலாக வசூலிக்கப்படும் 3 சதவிகிதமானது வரியானது நீண்ட காலத்திற்கு தொடராது என்றும் வாடிக்கையாளர்களின் நிதிச்சுமையை குறைப்பதற்காக , ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிகளால் கிடைக்கும் பயன்பாடுகள் மூலம் சரிக்கட்டப்படும் என்றும், 18 சதவிகித வரி வரம்பிலிருந்து விலக்கு அளிக்கும் இறுதி பட்டியலுக்காக காத்திருப்பதாகவும் பேங்க் பஜார் நிதி நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆதில் ஷெட்டி தெரிவித்தார்.
அதுபோலவே, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடுகளுக்கு பிரீமியம் செலுத்தும்போதும் கூடுதலாக செலுத்தும் 3 சதவிகித வரியானது ஜிஎஸ்டியின் உள்ளீட்டு வரிகளால் கிடைக்கும் பயன்பாடால், பிரீமியத்தொகை குறைவாக வசூலிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment