முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி


முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.



கிராமங்களில் சேவையாற்றிய அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி, அதன் அடிப்படையில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது, 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அவ்வாறு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான இதை கடைபிடிக்கிறோம் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், முதுநிலை மருத்துவ மாணவ சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

வழக்கின் பின்னணி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வு நடத்தி வகுப்புகளைத் தொடங்குவதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைப் பெற்றவர்களுக்கு மே 2-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின.

இந்த நிலையில், போனஸ் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் மே 8-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கியது.

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு கிராமப்புறங்களில் பணியாற்றிய மாணவர்களுக்கு 10 முதல் 30 சதவீத போனஸ் மதிப்பெண்ணை அளிக்கும் வகையில் அரசாணையை நிறைவேற்றியது. இதன் மூலம் அரசு மருத்துவர்கள் கலந்தாய்வில் முன்னிலை வகித்தனர். 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1066 இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை அரசு மருத்துவர்களே பெற்றனர்.
மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல், மாநில அரசுக்கு சமர்பிக்கப்பட்ட சுமார் 200 இடங்களையும் அரசு மருத்துவர்களே பெற்றனர்.

மே 31-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஏற்கெனவே வகுப்புகள் தாமதித்ததால் இடங்களைப் பெற்ற மாணவர்கள் உடனுக்குடன் வகுப்பில் சேருவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். மாணவர்களும் வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினர்.

இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது முறையானது இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 3 நாளுக்குள் புதிய தகுதிப்பட்டியலை தயார் செய்து, கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.

அரசு மேல்முறையீடு: இந்நிலையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களும் உச்சீநிதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், புதிய தகுதிப்பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வாரம் அவகாசம் கோரப்பட்டிருந்தது.
ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராதபட்சத்தில் இடங்களை இழக்க வேண்டுமே என்ற குழப்பம் அரசு மருத்துவர்களான மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பினால், இட ஒதுக்கீட்டில் இடம்பிடித்து முதுநிலை மருத்துவர் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)