மொபைல் திருடர்களுக்கு செக் வைக்கும் தொலைத்தொடர்பு துறை!

2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து சில மொபைல் போன்கள் கைப்பற்ற
ப்பட்டன.
அந்த மொபைல்கள் அனைத்தும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கடையில் வாங்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளவர்களிடம் பேசியது அந்த மொபைல் போன்களின் IMEI நம்பரை வைத்துதான் ட்ராக் செய்ய முடிந்தது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், மொபைல் போன்களும் முக்கியமான சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டன.

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப்பிறகு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் IMEI மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது. IMEI எண் இல்லாத தரம்குறைந்த மற்றும் போலியான மொபைல்களுக்கு, நெட்வொர்க் சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஆனால் சில சமூகவிரோதிகள் போலியான IMEI எண் மூலம் தொடர்ந்து நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போனில் உள்ள ஒரிஜினல் IMEI எண்ணை அழித்துவிட்டு, போலியான எண்ணை சட்டவிரோதிகள் பயன்படுத்துகின்றனர். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியான ஐ.எம்.இ.ஐ எண்கள் பயன்பாட்டில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக, மொபைலில் இருக்கும் IMEI எண்ணை அழித்தாலோ, போலியான எண்ணைப் பயன்படுத்தினாலோ, அதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க சட்டத்தில் மாறுதலைக் கொண்டுவர தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தேசித்து வருகிறது. மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க இந்தச் சட்டமாறுதல் வழிவகுக்கும்.

பொதுவாக நெட்வொர்க் சேவையை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன், IMEI எண் மூலமாக ஒரு மொபைலை ட்ராக் செய்ய முடியும். போலி IMEI எண்ணாக இருந்தால் அனைத்தையும் ட்ராக் செய்வது கடினமானது. ஒருவரின் தொலைந்துபோன மொபைல் சமூகவிரோதிகளிடம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த மொபைலில் இருக்கும் சிம் கார்டை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக ஒரு சிம் வாங்கி மொபைல் போனைப் பயன்படுத்த முடியும். திருடப்பட்ட மொபைல் மூலமாக சமூகவிரோதக் காரியங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. இது தனிநபருக்கு மட்டுமில்லாமல் தேசத்தின் பாதுகாப்புக்குமே அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருக்கிறது. இதைத் தடுப்பதற்காகத்தான் புதிதாகச் சில கட்டுப்பாடுகளைத் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் விதிக்கவுள்ளது.
இதன் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பி.எஸ்.என்.எல் டெலிகாம் சர்க்கிள் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. CEIR (Central Equipment Identity Register) எனப்படும் டேட்டாபேஸில் தொலைந்த மொபைல் போன் மற்றும் IMEI எண் க்ளோனிங் செய்யப்பட்ட மொபைல்கள் குறித்த தகவல்கள் சேமிக்கப்படும். பிரச்னைக்குரிய மொபைல்கள் ப்ளாக்லிஸ்ட் செய்யப்படும். எந்தவொரு நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனமும், இதில் பதிவு செய்த மொபைல்களுக்கு சேவை வழங்காது. இதனால் திருட்டு மொபைல்கள் சிம் பயன்படுத்த முடியாமல் பயனற்றதாகிவிடும். தனிநபரின் தகவல்களும், தேசத்தின் பாதுகாப்பும் இதனால் உறுதி செய்யப்படும் என பி.எஸ்.என்.அல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பரிசோதனை முயற்சியாக இத்திட்டம் ஆறு மாதங்களுக்கு புனே நகரில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. ஏற்கெனவே இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் இந்தத்திட்டம் பலனளித்தால், நாடு முழுவதும் இது விரிவாக்கம் செய்யப்படும்.

மனிதனுக்குப் பெயர் இருப்பதைப் போலதான், மொபைல் போனுக்கு IMEI (International Mobile Equipment Identity) எனச் சொல்லப்படும் 15 இலக்க எண் இருக்கிறது. இந்த எண் மூலம் மொபைல் போன் உற்பத்தியான நாடு, மொபைல் மாடல், தற்போது மொபைலில் எந்த நெட்வொர்க்கைச் சேர்ந்த சிம் பயன்படுத்தப்படுகிறது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், இந்த எண்ணை வைத்து மொபைல் போன் தற்போது எங்கு உள்ளது, அந்த மொபைல் போனிலிருந்து எந்தெந்த எண்களுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன போன்ற தகவல்களையும் அறிந்துகொள்ளவும், கண்காணிக்கவும் முடியும். இதனால்தான் மொபைல் போன் தொலைந்தால், அதனை ட்ராக் செய்வதற்காக IMEI நம்பர் குறித்த விவரத்தை காவல்துறையினர் கேட்பார்கள். பொதுவாக மொபைல் போனின் பேட்டரிக்குக் கீழ்ப்பகுதியில் இந்த IMEI எண் எழுதப்பட்டிருக்கும். மொபைல் டயல் பேடில் *#06# என டைப் செய்தும் IMEI எண் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)