மருத்துவப் படிப்பு: இரண்டு தர வரிசைப் பட்டியல்!

மருத்துவச் சேர்க்கை தொடர்பான தமிழக மாணவர்களின் குழப்பத்தைத் 
தெளிவாக்கவும், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குத் தயாராக இருக்கவும் நீட் தேர்வு மற்றும் ப்ளஸ் டூ மதிப்பெண் என இரண்டு வகையான தர வரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.


நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அரசு ஒருபுறம் வலியுறுத்திவரும் நிலையில், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றொருபுறம் வலியுறுத்தி வருகின்றன.

நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டசபையிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 85 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கிடும் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், திட்டமிட்டபடி கலந்தாய்வை நடத்த முடியவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடப்பதில் காலதாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல், கலந்தாய்வு எதன் அடிப்படையில் நடைபெறும் என்பதும் மாணவர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ‘நீட் தேர்வின் அடிப்படையிலா? அல்லது ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலா?’ என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது தர வரிசைப் பட்டியல் குறித்து நீதிபதி விளக்கம் கேட்டால் அதற்கு சரியான பதிலைத் தர வேண்டும் என்பதற்காக இரண்டு வகையான தர வரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறுகையில், “மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு எதன் அடிப்படையில் நடைபெறும் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் இரண்டு வகையில் எந்த முறையில் சேர்க்கை நடத்த நீதிமன்ற உத்தரவு வந்தாலும் அதற்கேற்றவாறு தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், நீட் தேர்வு மற்றும் ப்ளஸ் டூ மதிப்பெண் என இரண்டு வகையான தர வரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும், அதற்கேற்றவாறு உடனே தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தாண்டு மருத்துவ படிப்புக்கு 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445 இடங்களும், 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 என மொத்தம் 3,228 மருத்துவ இடங்கள் நிரப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)