மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் : தமிழ்நாடு ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அறிவிப்பு !!
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8வது ஊதியக்குழு அமலாகும் வரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், சத்துணவு,
அங்கன்வாடிகளில் பணிபுரியும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
உள்பட பல்வேறு அமைப்புகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டன. இதனை தொடர்ந்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, 11 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.
ஆனால் இன்று வரை எந்த கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றாததால், மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு கூறியதாவது : 8வது ஊதியக்குழு தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது அந்தக்குழு என்ன ஆனது என்றே தெரியவில்லை. எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.
முதல் கட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கோட்டை நோக்கி பேரணியும், 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால், செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கூறினார்.
Comments
Post a Comment