ரூபி டீச்சர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ரூபி டீச்சர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அட்டகாசமான கணக்கு ஆசிரியை. ஏதேனும் பள்ளிகளுக்குச் செல்லும் போது அவரது சில யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டு செல்வதுண்டு. பெருக்கல் வாய்ப்பாட்டிலிருந்து வகைக்கணிதம் தொகைக்கணிதம் வரைக்கும் எல்லாவற்றையும் ஏதேனும் வித்தையை வைத்துச் சொல்லிக் கொடுத்து அதை சலனப்படங்களாக்கி யூடியூப்பிலும் பதிவு செய்து வைத்திருக்கிறார். இவற்றிலிருந்து கற்றுக் கொண்டு பள்ளிக்கூடங்களில் பேசினால் ‘இவன் மண்டைக்கு இதெல்லாம் தெரியுமா?’ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் பாடம் எடுக்கும் எந்தக் கணக்கு ஆசிரியராக இருந்தாலும் ரூபி டீச்சரின் சலனப்படங்களைத் தாராளமாகக் கொடுக்கலாம். அப்படித்தான் கொடுத்து வருகிறேன்.
Big Short Filmsகாரர்கள் அவர் குறித்தான சிறு ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக அமர் ரமேஷ் தொடர்பு கொண்டார். அவர் வழியாக ஆவணப்படங்களின் இயக்குநர் மாவீரன் பழக்கமானார். பெயரே மாவீரன்தான். திருத்துறைப் பூண்டியைச் சார்ந்தவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வெளியுலகில் அதிகம் அறிமுகமாகாத ஆனால் இந்தச் சமூகத்திற்காக ஏதாவதொரு வகையில் செயல்படுகிறவர்களைப் பற்றிய ஆவணப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். இதில் வருமானம் எதுவுமில்லை. ஆனால் அவர்களின் Super cop, விதைப்பந்து போன்ற படங்கள் வெகு கவனம் பெற்றவை. லட்சக்கணக்கானவர்கள் பார்த்து பகிர்ந்திருக்கிறார்கள். நமக்கும் கூட வாட்ஸப்பில் வந்திருக்கும். ஆனால் இவர்கள்தான் தயாரித்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்க மாட்டோம். நேரமிருக்கும் போது அவர்கள் எடுத்திருக்கும் படங்களைப் பார்க்கலாம். அதிகபட்சம் மூன்று நிமிடங்கள்தான்.
இன்று ரூபி டீச்சர் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூபி டீச்சர் unsung heroine. பாடப்படாத நாயகி. அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல் ஒன்று உண்டு. சில மாதங்களுக்கு முன்பாக ஏதோவொரு கல்வித்துறை சார்ந்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. பன்னாட்டு ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் தென்கிழக்காசிய நாட்டின் ஆசிரியர்கள் ‘நாங்களே உங்க ஊர் டீச்சரோட வீடியோ பார்த்துத்தான் சில டெக்னிக் எல்லாம் பழகுகிறோம்’ என்றார்களாம். அதன் பிறகுதான் நம்மவர்களுக்கு அவரைப் பற்றித் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
ரூபி டீச்சர் குறித்து இன்னமும் பரவலாகத் தெரிய வேண்டும். அவர் கண்டறிந்திருக்கும் நுட்பங்களைப் போலவே ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பாடத்திலும் நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். அதற்கான உத்வேகத்தை ரூபி டீச்சர் அளிக்கிறார். அநேகமாக இந்த ஆவணப்படம் அவரைப் பற்றிய தேடலை அதிகமாக்கிவிடக் கூடும் என்றுதான் நினைக்கிறேன்.
சிறந்த ஆசிரியர்களின் பலமே தனக்கான அசல் தன்மையும், தனித்துவமும்தான். அசலும் தனித்தன்மையும் ஒரு நாளில் வந்துவிடுவதில்லை. அர்பணிப்புணர்வோடு புதிய புதிய தேடல்களோடு நெடுங்காலம் உழைப்பதன் வழியாகத்தான் தமக்கான தனித்த கற்பித்தல் முறையைக் கண்டறிகிறார்கள். அந்த தனித்துவமான கற்பித்தல் முறையே ஆசிரியர்களை மாணவர்களுடன் பிணைக்கிறது. ரூபி டீச்சரின் நுட்பங்கள் ஒரே நாளில் வசமாகாதவை என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்த நுட்பங்களைக் கண்டறிய எத்தனை ஆண்டுகாலம் உழைத்திருப்பார் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். அசாத்தியமான உழைப்பு.
தமது உழைப்பின் வழியாகத் தான் கண்டடைந்தவற்றை சலனப்படங்களாக எடுத்து தயக்கமேயில்லாமல் உலகிற்குக் கொடுக்கிறார். 'நீங்களும் தெரிஞ்சுக்குங்க’ என்கிற மனநிலை அது. இதுதான் அவர் மீதான மரியாதையை பன்மடங்காக்குகிறது. கல்வித்துறைக்கு இத்தகைய ஆசிரியர்கள்தான் முன்னுதாரணம். முன்னே செல்லும் ஏர்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான இளக்காரமான பார்வையை ரூபி டீச்சர் மாதிரியானவர்கள்தான் அடித்து நொறுக்கிறார்கள்.
மனம் நிறைகிறது. சல்யூட் டீச்சர்.
ரூபி டீச்சரை ஆவணப்படமாக்கிய குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
- வா.மணிகண்டன்
Comments
Post a Comment