ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்!

ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்!

ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் அமையும் நிலை 'கால சர்ப்பதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்பதோஷம் ஆகும். ஏதாவது ஒரு கிரகம் இதைவிட்டு வெளியே சென்றாலும், அது தோஷம் இல்லை. ராகு கேதுவால் ஏற்படும் கால சர்ப்ப தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும் என்ன என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.

ராகு கேது ''கால சர்ப்பதோஷம் என்றதும் பயப்படத்தேவையில்லை. இது தீமை செய்யாது. பலவீனமான கிரகங்கள் அல்லது வீடுகள் இவற்றுக்கு ராகு, கேது பார்வை, சேர்க்கை பெற்றால் மட்டுமே கால சர்ப்பதோஷம் தீமை செய்யும். இந்த தோஷம் பல வகைப்படும். அவை பின் வருமாறு:

1. அனந்த கால சர்ப்பதோஷம் (விபரீத கால சர்ப்பதோஷம்): லக்னத்தில் ராகுவும் 7- ம் வீட்டில் கேதுவும் அமைந்து இவற்றிற்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைவது. 27 வயது வரை சிரமமும் பிறகு நல்ல மாற்றங்களும் ஏற்படும்.

2. குளிகை கால சர்ப்பதோஷம்: 2 -ம் வீட்டில் ராகு 8 - ம் வீட்டில் கேது : இந்த அமைப்பு எதிர்பாராத பொருள் இழப்பையும், பூர்வீக சொத்துகளை இழக்கும் நிலையும், உடல் நலக் குறைவு, விபத்து போன்றவையும் ஏற்படும். 32 வயதுக்கு மேல் யோகம் ஏற்படும்.
கிரகங்கள்

3. வாசுகி கால சர்ப்பதோஷம்: 3 - ம் வீட்டில் ராகு 9-ம் வீட்டில் கேது: இந்த அமைப்பு ஜாதகரின் தொழிலில் அல்லது அவரது வேலையில் பிரச்னைகளைக் கொடுக்கும். சகோதரி, சகோதரர்களுக்குள் பிரச்னை, தேவையான சமயத்தில் உதவிகள் கிடைக்காமை, துணிந்து எதையும் செய்யமுடியாமல் இருப்பது போன்ற பலனைத் தரும். 36 வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.

4. சங்கல்ப கால சர்ப்பதோஷம்: 4-ம் வீட்டில் ராகு 10-ம் வீட்டில் கேது: குடும்ப வாழ்க்கையில் ஏதாவது ஒரு கவலை அழுத்திக்கொண்டே இருக்கும். இதனால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும் . 42 வயதுக்கு மேல் நல்ல பலன் தரும்.

5. பத்ம கால அல்லது பாத கால சர்ப்பதோஷம்: 5-ம் வீட்டில் ராகு 11 -ம் வீட்டில் கேது: இதுதான் புத்திர தோஷத்தை கொடுக்கக் கூடிய மிகவும் பாதகமான சர்ப்பதோஷம் ஆகும். நண்பர்கள், பழகியவர்கள்கூட விரோதியாவார்கள். எடுத்த காரியங்களில் தடை உண்டாகும். 48 வயதுக்கு மேல் நல்ல பலனைக் கொடுக்கும்.

6. மஹா பத்ம கால சர்ப்பதோஷம்: 6-ம் வீட்டில் ராகு, 12 - ம் வீட்டில் கேது: இது முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு அமையும். ஏன் என்றால், இது பிற்காலத்தில் நல்ல புகழையும், அதிகாரப் பதவியையும், அந்தஸ்தையும் கொடுக்கவல்லது. இந்த அமைப்பு எதிரிகளால் பிரச்னை, சிறைவாசம், வீண் விரயங்கள், அரச தண்டனை போன்ற பலன்களைத் தரும். பிறகு 54 வயதுக்கு மேல் முன்பு சொன்ன புகழ், அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றைத் தரும். சிலர் தன் கெளவரத்துக்காக கோயில் திருப்பணி, அறக்கட்டளை போன்றவை நிறுவி தொண்டு செய்வார்கள்.

ராகு

7. தட்சக கால அல்லது கால மிருத்யு சர்ப்பதோஷம்: 7 - ம் வீட்டில் ராகு லக்னத்தில் கேது: 27 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்டால், கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும், சிலர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் தெய்வ திருப்பணியில் ஈடுபடுவதும் உண்டு.

8. கார்க்கோடக கால சர்ப்பதோஷம்: 8 - வீட்டில் ராகு 2 - வீட்டில் கேது: மிகவும் கொடிய தோஷம். தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக் கொள்வார். தந்தையின் பணத்துக்காக அவருக்கு ஆபத்தை விளைவிக்கவும் துணிவார். அதனால், தந்தை வழி சொத்து இவருக்குக் கிடைப்பது கடினம். மற்றவர்களின் இன்ஷூரன்ஸ் பணம் இவருக்கு கிடைக்கும்.

9. சங்க குட கால சர்ப்பதோஷம்: 9 -ம் வீட்டில் ராகு 3 -ம் வீட்டில் கேது: வாழ்க்கை மேடுபள்ளமானதாக இருக்கும். சில நாள்கள் முன்னேற்றம், சில நாள்கள் தாழ்வுநிலை, சில நாள்கள் பிரபலமாகவும், சில நாள்கள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்துவார்கள். 36 வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.
சிவன்

10. கடக கால சர்ப்பதோஷம்: 10 -ம் வீட்டில் ராகு 4 -ம் வீட்டில் கேது: தொழிலில் தடை , அலுவலகங்களில் அவமரியாதை ஏற்படும். ஆனால், 47 வயதுக்குப் பிறகு மிகச் சிறந்த தொழிலதிபர் ஆவார். வேலையில் உயர் பதவி கிடைக்கும். ஆனால் சிம்மம், கன்னி லக்னகாரர்களுக்கு இந்த அமைப்பு இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கும்.

11. விஷ்தார கால சர்ப்பதோஷம்: 11 ம் வீட்டில் ராகு 5 -ம் வீட்டில் கேது: வெளி நாட்டில் வாசம். குழந்தைகள் மூலமாக வருத்தங்கள் ஏற்படும். அடிக்கடி பயணம் ஏற்படும். 48 வயதுக்கு மேல் நல்ல பலன் உண்டு.

12. சேஷ கால சர்ப்பதோஷம் : 12 -ம் இடத்தில் ராகு 6-ம் இடத்தில் கேது: அசுபர்கள் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல பலன் உண்டாகும். கல்வியில் சிறந்த நிபுணத்துவத் தன்மை ஏற்படும்.வெளிநாட்டில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பு உண்டாகும். வயோதிக காலத்தில் பேரும், புகழும் உண்டாகும்.

திருக்குளம்

ராகு கேது பெயர்ச்சி என்பது ஒரு ராசிக்கு 18 மாதங்கள் இருக்கும். பொதுவாகவே ராகு கேதுகள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். உதராணத்துக்கு மேஷத்தில் இருந்தால் செவ்வாயைப் போல் பலனைத் தருவார். ரிஷபத்தில் இருந்தால் சுக்ரனைப் போல் பலனைத் தருவார். அதாவது அந்த வீட்டின் உரிமையாளரைப் போல் பலனை தருவார்.

ராசிகள்
மேஷத்தில் அதிக சீற்றத்தையும், ரிஷபத்தில் அதிக ஆசையையும், மிதுனத்தில் அதிக காதலையும், கடகத்தில் குடும்பப் பிரிவையும், சிம்மத்தில் அதிக ஆணவத்தையும், கன்னியில் சுயநல புத்தியையும், துலாத்தில் வியாபார மேன்மையையும், விருச்சிகத்தில் அதிக வேகத்தையும், தனுசில் அதிக ஆன்மிகத்தையும், மகரம், கும்பத்தில் விஷ வாக்கையும், மீனத்தில் அதிக பொருள் ஆசையையும் தரும். ராகு கேது பெயர்ச்சியில் அது எந்த பாவத்தில் உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம்.

பொதுவான பரிகாரமாக தோஷத்தின் வீரியம் குறைய, பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ராகு கேதுகள் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது. பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. 

சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள்களில், அருகில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால், ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கும். 

பாம்பை அடித்துக் கொன்றவர்கள், பாம்புப் புற்றை இடித்தவர்கள் இந்த தோஷத்தின் பிடியில் இருப்பார்கள். அவர்கள் ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது அல்லது நாகர் சிலைக்கு பால் அபிஷேகம், மஞ்சள் காப்பிட்டு வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். 

ஜாதக ரீதியாக ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் இடத்தில் ராகு இருப்பவர்கள், விஷத்தன்மை அதிகமுள்ளவர்கள். இதனால், அவர்களின் சந்ததி வளர்ச்சி தடைப்படும். அதற்கு இதை முறிக்கக்கூடிய விதமாக, அருகம்புல் சாறு, ஆலவ் வீரா எனப்படும் சோற்றுக் கற்றாழைச் சாறு எடுத்துக்கொள்வது நல்லது. சிவஸ்துதி சொல்வதும் நல்லது. வைணவர்கள் கருட தண்டகம் படிப்பது நல்லது'' என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022