பொறியியல் கலந்தாய்வில் எந்தப் படிப்புக்கு மவுசு அதிகம்?

பொதுப் பிரிவுக்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் என்று காத்திருந்தவர்கள் பொறுத்தது போதும் என,
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்டு கடுமையான போட்டி போட்டுக்கொண்டு பாடங்களைத் தேர்வு செய்கிறார்கள். முதல் நாளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இ.சி.இ) பாடப்பிரிவிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. 

கட் ஆஃப் மதிப்பெண்ணில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஶ்ரீராம், அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பாடத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். கட் ஆஃப் மதிப்பெண்ணில் பொறியியல் மற்றும் மருத்துவம் இரண்டிலும் 200-க்கு 200 பெற்றுள்ள சதிஷ்வர், நீட் தேர்வில் 435 மதிப்பெண்ணைப் பெற்றிருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். 

கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் டாப் 10 இடங்களைப் பெற்ற பத்து மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார்கள். அதில் ஐந்து மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும், மூன்று பேர் எலெக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடத்தையும், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினீயரிங் பாடங்களை தலா ஒருவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

கடந்த நான்கைந்து வருடங்களாக மாணவர்களை ஈர்த்து முதல் இடத்தில் இருந்த மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புக்கு இந்த வருடம் ஆர்வம் இல்லை. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக மூன்றாவது இடத்தில் இருந்து வந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம், இந்த வருடத்தில் மாணவர்களை ஈர்க்கும் பாடமாக மாறி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு நாள்கள் முடிவில் கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 1,077 மாணவர்களும், எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடத்தை 1,470 மாணவர்களும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாடப்பிரிவுகளில் முதன்மையாக உள்ள நிறுவனங்கள் வேலைவாய்ப்பைப் பெரிய அளவில் வழங்கவில்லை. மாறாக, இன்னமும் கம்ப்யூட்டர் நிறுவனங்களே அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்குகின்றன என்பதால் கம்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கும், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுக்கிறார்கள். 
இன்ஜீனியரிங் கவுன்சலிங்கில் கட் ஆஃப் மதிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ஸ்ரீராம் "என்னுடைய ஃபேவரைட் கம்ப்யூட்டர் சயின்ஸ். Artificial Intelligence மற்றும் Machine Learning குறித்துக் கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்" என்கிறார். 


அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள இடங்கள் பெரும்பாலும் பூர்த்தி ஆகி விட்டன. கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள பிரிண்டிங் டெக்னாலஜி, மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினீயரிங் தமிழ் மீடியத்தில் மட்டும் இடங்கள் இருக்கின்றன. குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) கல்லூரியில் ரப்பர் டெக்னாலஜி பாடப்பிரிவில் மட்டும் இடம் இருக்கின்றன. மற்ற அனைத்துப்பிரிவுகளிலும் மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கோவையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி டெக்னாலஜி கல்லூரியிலும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.

முதல்நாள் கவுன்சலிங்க்கு 2,898 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 2,329 மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இரண்டாவது நாள் கவுன்சலிங் அழைக்கப்பட்டவர்கள் 5,942 பேர். இதில் பங்கேற்றவர்கள் 4,669 பேர் மட்டுமே. இதுவரை 1,762 பேர் கலந்துகொள்ளவில்லை.

முதல் பத்து மாணவர்களில் மூன்று பேர் மருத்துவ கவுன்சலிங் வாய்ப்பு கிடைத்தால் மாறிச் செல்ல தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் இடம்பெயரும்போது அந்த இடங்கள் மற்ற மாணவர்களால் நிரப்பப்படாமல் காலியிடமாகவே இருக்கும். இதர மாணவர்களை வைத்தும் நிரப்ப முடியாத நிலை. 

இந்த ஆண்டு குறைந்தது 500 முதல் 1,000 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்பு மருத்துவ படிப்புக்கு மாற வாய்ப்புள்ளது. அப்படி மாறும்போது, ஏற்கெனவே பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்டு அண்ணா பல்கலைக்கழகத்திலும், இதர அரசு பொறியியல் கல்லூரிகளிலும் தேர்ந்தெடுத்த இடங்கள் நிரப்பப்படாமல் தொடர்ந்து காலியிடமாகவே இருக்கும். ‘‘இந்தப் பிரச்னையை சரி செய்யும் வகையில் அடுத்த ஆண்டு முதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார் உயர்கல்வி துறைச் செயலர் சுனில் பாலிவால்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)