தேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி


        சென்னைப் பல்கலையின் தேர்வு முடிவுகள் தாமதத்தால், ஓர் ஆண்டு படிப்பு வீணாவதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


சென்னைப் பல்கலையின் தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக, திருமகன் பணியாற்றினார். அவரது ஓய்வுக்கு பின், ஐந்து மாதங்களுக்கு முன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக, பல்கலையின் பேராசிரியர், சீனிவாசனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, பதிவாளர், டேவிட் ஜவஹரின் பதவி காலம் முடிந்ததும், பேராசிரியர் கருணாநிதிக்கு, பதிவாளர் பொறுப்புவழங்கப்பட்டது. இரண்டு முக்கிய பதவிகளிலும், நேரடி நியமனம் இன்றி, கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள தால், பல்வேறு நிர்வாக பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. பல்கலையின் பட்டமளிப்பு விழா நடத்துவது முதல், தேர்வு முடிவுகள் வெளியிடுவது வரை, தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள், ஜூலை, 1ல் தாமதமாக வெளியிடப்பட்டன. மறுகூட்டலுக்கு, 10ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டு, நேற்று மாலையில் தான் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், ஒரு தாளில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, இன்று தேர்வு நடத்தப்படுகிறது.உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்த ஆண்டே, பி.எட்., மற்றும் அடுத்த உயர்கல்வியில் சேர முடியும் என்பதால், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மறுகூட்டல் மதிப்பீடு தாமதமாகி,உடனடி துணைத் தேர்வும் தாமதமாக நடத்துவதால், மாணவர்கள், இந்த ஆண்டே, அடுத்த கட்ட படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:தேர்வையும், தேர்வு முடிவையும், சென்னைப் பல்கலை தாமதமாக நடத்துகிறது. இன்று நடக்கும் தேர்வு முடிவு வர, சில வாரங்கள் ஆகும்; அதன்பின், தற்காலிக சான்றிதழுக்கு இன்னும் தாமதம் ஆகும். அதை பெற்று, உயர்கல்விக்கு செல்வதற்குள், மாணவர் சேர்க்கையே முடிந்து விடுகிறது. அதனால், உடனடி துணைத்தேர்வு துவங்கிய நோக்கமே வீணாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)