PUBLIC EXAMS FOR 5 & 8TH STD ?
5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி தொடர்பான விவாதக் கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது:
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மே மாதத்தில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்விலும், தோல்வியடையும் மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியாது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்து விட்டன. 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 9-ஆம் வகுப்புக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, அதே வகுப்பில் நிறுத்தி வைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும்.இதற்காக, அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டப்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தேர்ச்சிபெறவில்லை என்று கூறி நிறுத்தி வைக்க முடியாது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த முடிவால் மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகளே நடத்தப்படுவதில்லை. கிட்டத்தட்ட மதிய உணவு பள்ளிகளாகவே அவை இயங்குகின்றன. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மதிய உணவு சாப்பிட்ட பிறகு வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள்.மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கச் செய்யும் வகையில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மத்திய அரசைப் பொருத்தவரை கல்வி என்பது தேசியக் கொள்கையாகும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
Comments
Post a Comment