நில அளவை பதிவேடுகள் துறையில் பணியிடங்கள் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும்
நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்களும், 328 வரைவாளர் பணியிடங்களும் மற்றும் 28 அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களும் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும்.
சட்டசபையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்புகளை
வெளியிட்டு பேசியதாவது:-
பருவமழை மற்றும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னர் பேரிடர்களை எதிர்கொள்ளும் பொருட்டு மாநிலத்தில் மண்டல வாரியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை களப்பணியாளர்களை ஒருங்கிணைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தயார் செய்ய ஆண்டொன்றுக்கு ரூ.75 லட்சம் செலவு மேற்கொள்ளப்படும். வரும் காலங்களில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஆளில்லா வானூர்தி மூலம் வான்வழி புகைப்பட ஆய்வானது பெரும் பங்காற்றி வருகிறது. எனவே, புதிய நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேரிடர் கால தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு புதிய முயற்சிகள் துவக்கத் திட்டத்தின் கீழ் ரூ.7.01 கோடி செலவில் ஆய்வினை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 2 வரவேற்பு துணை வட்டாட்சியர் பணியிடங்களை வரவேற்பு வட்டாட்சியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்.
வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மற்றும் பயிர்க்காப்பீடு தொடர்பான விவரங்களை பதிவு செய்வதற்காக தமிழ்நிலம் மென்பொருளில் கூடுதல் செயலிகள் உருவாக்கப்படும். அரசால் பராமரிக்கப்படும் நில உரிமைப் பதிவேடுகளில் இடம் பெற்றுள்ளவர்களின் உரிமையை மறுக்க இயலாத நிலையில் உறுதிப்படுத்துகிற வகையிலான பத்திரப்பதிவு முறையே டாரென்ஸ் டைட்டில் முறைஎன்பதாகும். நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டப் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்ட ஊரகப்பகுதியில் டாரென்ஸ் டைட்லிங் அமைப்பு முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment