காவலர் தேர்வில் முறைகேடு: ஆயுதப்படைக் காவலர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சுப் பணியாளர்கள் இருவர் மற்றும் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் என 3 பேர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள
னர்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தேர்வுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதித் தேர்வுகள், ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தேர்வை ஊரகக் காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். தேர்வுப் பணியில் அமைச்சுப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் தகுதி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில், 4 தேர்வர்களின் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் பட்டியலில் தேர்வுக்குழு ஆய்வாளரின் கையொப்பம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால், 4 பேரும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்று தகுதி பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த ஆய்வாளர், 4 பேரும் தகுதித் தேர்வில் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால், அங்கு பணியில் இருந்த அமைச்சுப் பணியாளர்கள் மூவர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகியோர், நான்கு தேர்வர்களும் அனைத்துத் தகுதி தேர்வுகளிலும் பங்கேற்றதாகக் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த ஆய்வாளர், 4 தேர்வர்களையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். அதில், இருவர் காவலர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொருவர் ஆயுதப்படைக் காவலரின் உறவினர் என்பதும் தெரிய வந்தது. மேலும், நான்கு தேர்வர்களிடமும் ரூ. 3 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டதால், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்காமலேயே அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அமைச்சுப் பணியாளர்களும், ஆயுதப்படைக் காவலரும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இத்தகவல், மதுரை சரக துணைத் தலைவர் பிரதீப்குமார், ஊரகக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், ஆயுதப்படை மைதானத்துக்குச் சென்ற இருவரும், தேர்வர்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சுப் பணியாளர்களான பாலமுருகன், முரளிதரன் மற்றும் ஆயுதப்படைக் காவலர் முருகேசன் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் புதன்கிழமை உத்தரவிட்டார். முறைகேட்டில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு உள்ளதாகவும், அவரிடமும் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment