வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்! - VIKATAN


       குழந்தைப்பருவத்தின் பெரும்பகுதி பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர்.

            3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க டென்ஷன்.

அறிவு, நடத்தை, மொழி உட்பட பல விஷயங்களையும் குழந்தைகள் பள்ளி வாழ்வில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர். ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு மதிப்பு சார்ந்ததாக இருந்த காலத்தில், ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் ஆசிரியர், மாணவருக்கு இடையிலான உறவு எல்லாமே நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் சொன்னதை வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக்கொண்ட காலகட்டம் இதுவல்ல. இன்று மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல தினமும் தன்னை மேம்படுத்திக்கொண்டு படிக்க வேண்டிய நிலைக்கு மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
ஆனாலும் ஆசிரியர்கள் மாணவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசினார் உளவியல் ஆலோசகர் பாபுரங்கராஜன்
‘‘பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாட்டைக் களைய ஆசிரியர்கள் சில விஷயங்களின் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. வகுப்பறையில் அவர்கள் கண்டிப்பாக 5 விஷயங்களைத் தவிர்த்தாக வேண்டும்.
இன்று நடத்தும் பாடத்தை நாளை படித்து வர வேண்டும் என்பது பொதுவான விதி. அதையே ஆசிரியர்கள் கடுமையான கட்டளையாக சொல்லக்கூடாது. படிக்காமல் வந்தால் 10 முறை இம்போசிஷன் எழுத வைப்பேன் எனப் பயமுறுத்துவது போன்ற பாணியில் படிக்க வைக்க முயல்வது தவறு. இது, அந்தப் பாடத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் ஒருவித வெறுப்பினை உண்டாக்கும். அதேபோல் குறிப்பிட்ட ஒரு மாணவன் மீது காரணம் இல்லாமல் வெறுப்பினைக் காட்டுவது, முதல் நாள் ஒரு விஷயத்தை ஃபாலோ செய்யச் சொல்லிவிட்டு மறுநாள் வேறு ஒன்றை வலியுறுத்துவது, முன்னுக்குப் பின் முரணான கட்டளைகள் இடுவது,  போன்றவை மாணவர்களைக் குழப்புவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாக்கும். இது ஆசிரியர்- மாணவர் இருவருக்குமான இணக்கத்தை  கெடுத்துவிடும். இதுபோன்ற செயல்களை ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளில் என்ன வேலைகளையெல்லாம் மாணவனால் செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலைகளை பிரித்துக்கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் மனப்பாடம் செய், எழுது என்று செய்ய இயலாத அளவுக்கு வேலைகளை வாங்கும்போது, மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகிச் செல்ல நேரிடும். எந்த மாணவரிடமிருந்து எப்படிப்பட்ட திறனை எதிர்பார்க்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வேலை வாங்கினால் ரிசல்ட் திருப்திகரமாக இருக்கும்.
இன்றைய குழந்தைகள் சுயமரியாதையை அதிகம் எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஐந்து வயது குழந்தையாக இருந்தால்கூட மற்றவர் முன்னிலையில்தான் திட்டுவாங்குவதை அவர்கள் விரும்புவதில்லை.  அதையும் மீறி திட்டினால் அதைப் பெருத்த அவமானமாக நினைத்து விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். இது மாணவர்களின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாராட்டுவதை எல்லோர் முன்னிலையிலும், திட்டுவதை தனியாகவும் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எஜமானர்கள் போலவும், மாணவர்கள் தொழிலாளிகள் போலவும் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
ஆசிரியர்கள், தாங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் வேண்டாம். தவறு மனித இயல்பு. தவறு செய்வதை புரியும்படி திருத்தினாலே அவை மீண்டும் நிகழாது. இன்றைய குழந்தைகள் அதிகநேரம் இருப்பது வகுப்பறையில்தான். எனவே மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் நடந்துகொண்டாலே போதுமானது. நன்கு படிப்பவர்களே அறிவாளிகள் என்கிற சிந்தனையை ஆசிரியர்கள் தங்கள் மனங்களில் இருந்து நீக்கினாலே போதும். மாணவர்கள் மிளிர்வார்கள்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)