அசல் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பங்கேற்கலாம் : மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்
''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங்கில்,அசல் சான்றிதழ்கள் இல்லையென்றாலும், மாணவர்கள் பங்கேற்கலாம்,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கை துவக்கி வைத்த, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, 500 ரூபாய்க்கும், கல்வி கட்டணத்துக்காகவும், வங்கியில், 'டிடி' எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்; அதற்காக கவலைப்பட வேண்டாம். கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில், நேரடியாக பணத்தை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம்; இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.'நீட்' தேர்வு அடிப்படையில், முதன் முதலாக கவுன்சிலிங் நடைபெறுகிறது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, கவுன்சிலிங் அரங்கில் உள்ள, ஆலோசனை மையத்தில், தெளிவு பெறலாம். கவுன்சிலிங் பங்கேற்போர்,அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.மருத்துவம் அல்லாத பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளில் சேர்ந்தோர், தங்கள் கல்லுாரிகளில் இருந்து, உண்மையறிதல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் பெற முடியாதோர், அசல் சான்றிதழ்களை பின் சமர்ப்பிப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி கொடுத்து விட்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இடங்கள் ஒதுக்கீடு எவ்வளவு?
சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 122; விளையாட்டு பிரிவினருக்கு மூன்று; முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஆறு என, மொத்தம், 131 இடங்கள் உள்ளன. கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 20 பேர்; விளையாட்டு பிரிவில், ஆறு பேர்; முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில், 60 பேர் பங்கேற்றனர்.கவுன்சிலிங் முடிவில், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் பிரிவில், அனைத்து இடங்களும் நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கான, 122 இடங்களில், ஐந்து இடங்கள் நிரம்பின; மீதம், 117 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில், பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று காலை, 9:00மணிக்கு துவங்குகிறது. இதில், தரவரிசை பட்டியலில், ஒன்று முதல், 1,209 வரையிலான இடங்களை பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலாதோர், தங்கள் தரவரிசை அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment