மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் !!


       நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு  குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


        இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

1. வருமான வரி வரம்பு குறைப்பு
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.
2. வரிக்கழிவு குறைப்பு
பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்பட்ட வரிக்கழிவு (Rebate) ரூ.5,000-லிருந்து ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரி கட்டுபவர்களுக்கு ரூ.2,500 இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வரிக்கழிவு சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த வரிக்கழிவானது, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் (என்.ஆர்.ஐ) கிடையாது.
3. ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் வரிச் சலுகை ரத்து 
கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ் காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (Rajiv Gandhi Equity Savings Scheme – RGESS) அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதற்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 80சி-க்கு வெளியே வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சிசிஜி பிரிவின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. வரிச் சலுகை பெற பல குழப்பமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன (விளக்கமாகப் படிக்க: http://bit.ly/2uuqRfG). இதன் காரணமாக இதில் அதிகமான வர்கள் முதலீடு செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், 2017-18-ம் நிதியாண்டு முதல் இந்த வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகையின் மூலம் குறிப்பிட்ட சில தனிநபர்களே பயன்பெற்று வருவதால், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. வீட்டுக் கடன் வட்டிச் சலுகை குறைப்பு
நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கான வரிச் சலுகை குறைக்கப் பட்டுள்ளது. இது பற்றி முன்னணி ஆடிட்டரான எஸ்.சதீஷ்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருந்தால் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் நிதியாண்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு இல்லாமல் முழு வட்டிக்கும் வரிச் சலுகை தரப்பட்டது. அதே நேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டுவது அவசியம். ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கி, ஒரு வீட்டில் குடியிருந்து, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அனைத்துக் கடன்களையும் திரும்பக் கட்டும் வட்டியில், மேலே கூறப்பட்டது போல் வரிச் சலுகை அளிக்கப்பட்டது.
நடப்பு 2017-18 ம் நிதியாண்டில், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிச் சலுகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் மட்டுமே பெற முடியும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வீட்டில் இருந்துகொண்டு, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தவர்கள் அதிகமாக வரி கட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, வரிச் சலுகைக்காக வீடு வாங்குவது குறைந்து ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும்.
எனினும், வீட்டுக் கடன் வட்டி மூலமான இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் முந்தைய சலுகை இப்போதும் தொடர்கிறது” என்ற சதீஷ்குமார், இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றியும் சொன்னார்.
“வீட்டுக் கடன் மூலம் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டதன் மூலம் நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1,20,000 கிடைத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வாடகைத் தொகையில் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய வரி மற்றும் பராமரிப்புச் செலவைக் கழித்துக்கொண்டு, மீதியை வாடகை வரவாக எடுத்துக்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு கட்டிய சொத்து வரி ரூ.15 ஆயிரம் என வைத்துக் கொண்டு, அதைக் கழித்துக் கொள்வோம். மீதமுள்ள 1.05 லட்சத்தில் 33 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவான ரூ.34,650-யைக் கழித்தால் ரூ70,350-ஆகக் கிடைக்கும். இதனை வாடகையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நிதியாண்டில் வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டி ரூ.2.25 லட்சம் என வைத்துக் கொள்வோம். இதிலிருந்து வீட்டு வாடகை ரூ.70,305-யைக் கழித்தால், அவருக்கு வட்டி மூலமான இழப்பு ரூ.1,54,650 ஆகும். இந்தத் தொகையை அடுத்த எட்டு ஆண்டுகளில் கிடைக்கும் வாடகை வருமானத்தில் ஈடுசெய்துகொள்ளலாம். இதேபோல், அடுத்து வரும் வருடங்களுக்கும் வீட்டு வாடகையையும், திரும்பக் கட்டும் வட்டியையும் கணக்கிட வேண்டும். வட்டிக் குறைந்தால் அல்லது வாடகை தொகை அதிகரித்தால் மட்டுமே இப்படி ஈடு கட்டுவது லாபகரமாக இருக்கும்” என்றார். 
5. என்.பி.எஸ் – கூடுதல் வரிச் சலுகை தொடர்கிறது
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்.பி.எஸ்) மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு 80CCD (1B) -ன் கீழ் வழங்கப்பட்ட ரூ.50,000-க்கான வருமான வரிச் சலுகை இந்த ஆண்டும் தொடர்கிறது. இது 80சி பிரிவுக்கு வெளியே தரப்படும் சலுகை என்பதால், மாத சம்பளக்காரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும். இதற்குமுன்பு, என்.பி.எஸ் திட்டத்தில் 60 வயதுக்குப் பிறகுதான் பணத்தை எடுக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இப்போது மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு நாம் ஏற்கெனவே செய்த பங்களிப்பிலிருந்து 25 சதவிகித தொகையைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தொகைக்கு வரிப் பிடித்தம் இல்லை என்பது கூடுதல் சலுகையாகும்.
7. பணவீக்க விகித சரிகட்டல் அடிப்படை ஆண்டு மாற்றம்
நீண்ட கால மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவதற்கான பணவீக்க விகித சரிக்கட்டல் அடிப்படை ஆண்டு 1981 என்பது 2001-ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வரிதாரர்கள் பயன் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
8. சொத்துகளுக்கான நீண்ட கால ஆதாயம்
சொத்துகளுக்கான (மனை மற்றும் வீடு) நீண்ட கால ஆதாயம் கணக்கிடுவதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக இருந்தது. அது 2017-18 நிதியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் சொத்துப் பரிமாற்றம் நடப்பதோடு, சொத்து விற்பவர்கள் கட்டும் வரியும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. பங்குகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி
பங்குகளை வாங்கும்போது பங்குப் பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax – STT) கட்டியிருந்தால் மட்டுமே நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகையைப் பெற முடியும். 2014, அக்டோபர் 1-ம் தேதிக்குப்பிறகு வாங்கப்பட்ட அனைத்து பங்குகளுக்கும் இது பொருந்தும்.
10. ஆதார் கார்டு, பான் எண் இணைப்பு
2017 ஜூலை 1 முதல், புதிய பான் கார்டு பெற ஆதார் எண் அவசியமாகும். மேலும், பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. வரிக் கணக்கு தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம்
2017-18-ம் நிதியாண்டுக்கான, வருமான வரிக் கணக்கை 2018 ஜூலை 31-ம் தேதிக்குள் மாத சம்பளக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கெடு தேதி தாண்டினால், வரிக் கணக்கு தாக்கலில் திருத்தம் ஏதும் செய்ய முடியாது. அதே நேரத்தில், கெடு தேதி தாண்டி, 2018 டிசம்பர் 31-க்குள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும். இது தாமதக் கட்டணம் என்கிற பெயரில் வசூலிக்கப்படும். வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், இந்த தாமதக் கட்டணம் ரூ.1,000 கட்ட வேண்டும்.
சுயதொழில் செய்பவர்களுக்கும் நிறுவனங் களுக்கும் தாமதக் கட்டணம் ரூ.10,000 என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தாமதக் கட்டணம், வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, கம்ப்யூட்டர் திரையிலேயே தாமதக் கட்டணம் காட்டப்படும் எனச் சொல்லப்படுகிறது.
12. ஒரு பக்க எளிய வருமான வரிப் படிவம்
2017-18-ம் நிதியாண்டில், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் உள்ளவர்கள் (வணிக வருமானம் இருக்கக் கூடாது), வருமான வரிக் கணக்கை எளிமை யாகத் தாக்கல் செய்ய வசதியாக ஒரே ஒரு பக்கம் கொண்ட வருமான வரிப் படிவம் (Income Tax Return – ITR) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
13. முதல் முறை வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மீளாய்வு இல்லை
முதன்முதலாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் வருமான விவரங்கள் மீளாய்வு (Scrutiny) செய்யப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், மிக அதிக தொகையைப் பரிவர்த்தனை செய்து, அது குறித்த தகவல் வருமான வரித் துறைக்கு கிடைத்திருக்கும்பட்சத்தில் இது பொருந்தாது.
14. பத்து ஆண்டுகள் வரை வருமான வரிக் கணக்குகள் ஆய்வு
தற்போது, கடைசி ஆறு ஆண்டுகளுக்கு வருமான வரி விவரங்கள், குறிப்பாக அறிவிக்கப்படாத வருமானம் அல்லது சொத்து குறித்து வருமான வரித் துறையால் மீளாய்வு செய்யப்படுகிறது. இனி பத்து ஆண்டுகளுக்கான விவரங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதனால் வரிதாரர்கள், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கான ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பழைய ஆவணங்களைப் பலரும் ஒழித்துக் கட்டியிருப்பர்கள். அவர்களிடம் இப்போது அந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் கேட்டால், அவர்கள் எங்கே போவார்கள்?
வருமான வரி தொடர்பாக வந்துள்ள இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நன்மை பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank