பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க உத்தரவிட முடியாது : பொது நல மனுக்களை தள்ளுபடி
பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க உத்தரவிட முடியாது : பொது நல மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.
பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேசிய யோகா கொள்கைகளை வகுத்து நாடு முழுவதும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை அதனை கட்டாய பாடமாக போதிக்க வேண்டும் என கூறி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா மற்றும் டெல்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஜே சி சேத் ஆகியோர் இந்த பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாணவர்களின் நலன் காக்கும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும் யோகாவை கட்டாயமாக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகாவால் மாணவர்களின் உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும். எனவே யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும் என வாதிட்டார். வழக்கை விசாரித்த மதன் பீமாரவ் லோகூர் தலைமையிலான அமர்வு, மாணவர்களின் உடல் நலனை காப்பது என்பது அடிப்படை உரிமை. அதனை நீதிமன்றம் மறுக்கவில்லை ஏற்று கொள்கிறது. ஆனால் இது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினர்.
பள்ளிகளில் என்ன பாடத்தை கற்பி்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என கூறி நீதிபதிகள் பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டனர். இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்கும் எண்ணம் இல்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment