புதிய ஓய்வூதியத் திட்ட வல்லுனர் குழு அரசாணை வெளியிடாததால் சந்தேகம்!!
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு குறித்து அரசாணை வெளியிடாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. இதில் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த ஓய்வூதிய சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் 13 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்றோர் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபைத் தேர்தலையொட்டி அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலாநாயர் தலைமையில் 5 பேர் வல்லுனர் குழுவை 2016 பிப்., 26 ல் அரசு அமைத்தது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே அக்குழுவின் இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.
இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழுவின் இயங்கும் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அரசு நீட்டித்தது. உறுப்பினர்களாக இருந்த பார்த்தசாரதி, லலிதாசுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் இக்குழு டிச., 25 வரையும், 2017 மார்ச் 25 வரையும் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மார்ச் 25 க்கு பின் வல்லுனர் குழு நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், அக்குழுவின் தலைவர் சாந்தாஷீலா நாயர் திடீரென ராஜினாமா செய்தார். தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்யாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆக., 3 ல் வல்லுனர் குழுவிற்கு புதிய தலைவராக ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை நியமித்து அரசு உத்தரவிட்டது. மேலும் இக்குழு தனது அறிக்கையை நவம்பர் இறுதிக்குள் அளிக்க வேண்டுமென, தெரிவித்தது. இதுகுறித்து இதுவரை அரசாணை வெளியிடாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஆரம்பத்தில் வல்லுனர் குழு அமைத்தபோதும், நீட்டிப்பு செய்த ஒவ்வொரு முறையும் நிதித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது புதிய தலைவர் நியமித்ததாக அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடவில்லை. இதனால் உறுப்பினர்கள் குறித்த விபரமும் தெரியவில்லை.
ஏற்கனவே சாந்தாஷீலா நாயர் தலைமையிலான குழு தயாரித்த அறிக்கை என்னாச்சு என்று
தெரியவில்லை. கண்துடைப்பாக தான் புதிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேவையின்றி காலத்தை கடத்தாமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல் படுத்த வேண்டும், என்றார்
Comments
Post a Comment