ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான ஆசிரியர்களும், அதிக மாணவர்களுக்கு குறைவான ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆக.1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை அடிப்படையில் மீண்டும் பணி நிரவல் நடத்த வேண்டும் எனஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆகஸ்ட் முதல் தேதி அன்று மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் பணி நிரவல் நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை, தற்போது முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய கல்வி ஆண்டின் (2016}17) மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நிரவல் நிகழாண்டில் நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வியில் மாவட்டத்திற்குள்ளும், தொடக்க கல்வித்துறையில் வட்டார அளவிலும் ஆசிரியர்கள் பணி நிரவல் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2017}18 ஆம் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை என்பது சில பள்ளிகளில் அதிகரித்தும், பல பள்ளிகளில் குறைந்தும் உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல், முன்னதாக ஆசிரியர் பணி நிரவல் நடைபெற்றதன் காரணமாக 2017}18 ஆம் கல்வி ஆண்டில், பல பள்ளிகளிலும் குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் வரை பணிபுரியும் நிலை உள்ளது. அதே நேரத்தில், அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் குறைவான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 160 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் 5 ஆசிரியர்களும், 160க்கும் கூடுதலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும் பணிபுரியும் வகையில், பணி நிரவல் அமைய வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாக உள்ளது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக மே மாதமே பணி நிரவல் நடைபெற்றதால், தற்போது பல பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாற்காலிக ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்துகின்றனர். இதனிடையே, 2017 மே 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பலர் ஓய்வுப் பெற்றுள்ளதால், அந்த காலிப் பணியிடங்களும் தற்போது கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளியில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிவதால் அரசு சார்பில் ஊதியத்திற்காக செலவிடப்படும் பணமும் பயனில்லாமல் போவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், மீண்டும் பணி நிரவல் நடத்தி, உபரியாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டின் தொடக்கத்திலோ, இடைப்பட்ட காலத்திலோ ஆசிரியர்கள் பணி ஓய்வு நாள் வந்தாலும், அவருக்கு அந்த கல்வியாண்டின் இறுதி ( மே 31ஆம் தேதி) வரை பணி புரிவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் நிகழாண்டில் மே மாதமே பணி நிரவல் நடத்தப்பட்டதால், அதற்கு பின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் குறித்த பட்டியல் கணக்கிடப்படவில்லை. மேலும், ஆகஸ்ட் முதல் நாளிலேயே மாணவர் சேர்க்கை விவரம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பணி நிரவல் நடத்தப்பட்டதால், தற்போது உபரி பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை பிரச்னை எழுந்துள்ளது.
மே மாதம் நடைபெற்ற பணி நிரவலின் போதும், மாவட்ட வாரியாக ஒரு பாடத்திற்கு 10க்கும் குறைவான பணியிடங்களுக்கு மட்டுமே பணி நிரவல் நடைபெற்றன. வட மாவட்டங்களில் குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மீண்டும் முறையாக பணி நிரவல் நடைபெற்றால் மட்டுமே, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank