உங்களது பிள்ளைகள் Blue Whale Game விளையாடுகிறார்களா? பெற்றோர்களே உஷார்

Blue Whale Game | உங்களது பிள்ளைகள் புளூ வேல் கேம் விளையாடுகிறார்களா? பெற்றோர்களே உஷார் !



புளூ வேல் சேலஞ்ச்சில் ஒருமுறை சிக்கி விட்டால் அதன் பிறகு அதிலிருந்து நீங்களே நினைத்தாலும் மீள்வது கடினம். இது விளையாட்டல்ல, விபரீதம்!’


மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஒரு தற்கொலை நடந்தது. பதினான்கே வயதான சிறுவன் ஒருவன் ஐந்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். பாசமான, சுறுசுறுப்பான, நல்ல அறிவுத் திறமையுடைய அந்த சிறுவனின் மரணம் பெற்றோரைப் புரட்டிப் போட்டது.

தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு வீட்டிலோ, நண்பர் வட்டாரத்திலோ, பள்ளியிலோ எந்த பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்த தற்கொலை? எனும் விசாரணை திடுக்கிடும் பல செய்திகளை வெளிக்கொண்டு வந்தது.

இந்த தற்கொலைக்குக் காரணம் ஒரு ஆன்லைன் கேம். ‘புளூவேல்’ எனும் இந்த விளையாட்டு உலகெங்கும் ஏற்கனவே சுமார் 130 பதின் வயதினரைப் பலிவாங்கியிருக்கிறது. ‘ஐம்பது நாள் சவால்’ என அழைப்பு விடுத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவாலைச் செய்யச் சொல்லி படிப் படியாக பதின் வயதினரை உளவியல் ரீதியாக தற்கொலைக்குத் தூண்டுகிறது இந்த விளையாட்டு.

முதலில் எளிமையாய் தோன்றும் இந்த விளையாட்டு, பின்னர் உடலைக் கீறிக் காயப்படுத்துவது, உயிரினங்களைக் கொல்வது, நரம்புகளை அறுத்துக் கொள்வது என விபரீதமாய் சென்று, கடைசியில் தற்கொலை செய்து கொண்டால் வெற்றி என முடியும்.

ஒவ்வொரு நாள் சவாலையும் வீடியோ எடுத்தோ, புகைப்படம் எடுத்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும். அதை ஒரு குழுவினர் நேரடியாகக் கண்காணித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு நுழைய அனுமதிப்பார்கள். நேரடியான ‘சேட்’ மூலம் இந்த விளையாட்டு தொடரும். இந்த உளவியல் விளையாட்டை எதிர்கொள்ளும் பதின்வயதினர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வதை வெற்றி எனக் கருதி விடுகின்றனர். தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தவர்களும் உலகமெங்கும் பலர் உண்டு.


இந்த விளையாட்டை உருவாக்கியவன் 22 வயதான ‘பிலிப் புடேய்கின்’ எனும் ரஷிய இளைஞன். உளவியல் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோதே கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவன். உளவியல் ரீதியாக மக்களை எப்படி தூண்டி தடுமாற வைக்கலாம் எனும் வித்தை தெரிந்தவன்.

2013-ம் ஆண்டு இந்த ஆன்லைன் விளையாட்டை ஆரம்பித்தான். முதலில் சவாலை ஏற்பவர்களிடம் ஆன்லைனில் இவனே நேரடியாய்ப் பேசி தற்கொலைக்குத் தூண்டினான். அப்படி 16 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

பின் உலகெங்கும் ஏராளமான பதின் வயதினர் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்ததால் ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலமாக விளையாடுபவர்களிடம் பேசி வந்தான். எல்லாருடைய சிந்தனையும் எப்படியாவது இந்த விளையாட்டு விளையாடுபவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்ளும் போதும் இவர்கள் அதை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ரஷிய அரசு இந்த விஷயத்தை அறிந்ததும் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏன் இப்படி மக்களை தற் கொலைக்குத் தூண்டுகிறாய் என கேட்டபோது, ‘இவங்க எல்லாம் பூமிக்கு பாரம். கோழைகள். இவர்களெல்லாம் செத்துப் போவது உலகுக்கு நல்லது. அதனால தான் அவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறேன். அப்படிச் செய்து நாட்டை தூய்மையாக்கும் வேலையை நான் செய் கிறேன்’ என கூலாக பதிலளித்தான்.

இன்னும் ஏராளமானவர்கள் தற் கொலைக்குத் தயாராக இருப்பதாக அவன் சொன்னது பெற்றோரை பதற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

ஒரு முறை இந்த விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால் வெளியேறுவது உளவியல் சவால். அப்படியே வெளியேற வேண்டும் என நினைக்கும் இளையவர்களை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மிரட்டுவார்கள். கொலை செய்து விடுவோம், சொந்தக்காரர்களை கொல்வோம், வீட்டில் உள்ளவர்களை அழிப்போம் என்றெல்லாம் மிரட்டி பயப்பட வைப்பார்கள். இவர்களைக் குறித்த தகவல்கள் எல்லாம் அவர்கள் வசம் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள்.

அந்த பயமே விளையாடுபவர்களை நிலைகுலையச் செய்து விடும். இந்த மிரட்டல்களைத் தாண்டியும் பல நாடுகளி லுமுள்ள தைரியமான இளைஞர்கள் பலர் காவல்துறையினரிடம் இந்த விளையாட்டு குறித்து புகார் அளித்துள்ளனர்.

பிரான்ஸ் போன்ற நாடுகளில் காவல் துறையே இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாய் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்கா, அர்ஜென்டீனா, சிலி, பிரேசில், பல்கேரியா, சீனா, கொலம்பியா, ஜார்ஜியா, இத்தாலி, கென்யா, பெருகுவே, போர்சுகல், ரஷியா, ஸ்பெயின் என உலகெங்கும் பலரை பலிவாங்கிய இந்த விளையாட்டு இப்போது இந்திய சிறுவன் ஒருவனையும் பலிவாங்கி நமக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்களை ஆன்லைன் விளையாட்டுகளை விட்டு விலக்கியே வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிப் பதும், எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதை நெறிப்படுத்துவதும் எளிதான காரியம். அதை பெற்றோர் தவறாமல் செய்ய வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகள் சிறுவர் களையும், இளைஞர்களையும் வெகுவாகப் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. மன அழுத்தம், தனிமை உணர்வு, வன்முறை சிந்தனை, உடல் பலவீனம் போன்ற விளைவுகள் இதனால் சர்வ நிச்சயம் என எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான ‘சைக்காலஜிகல் ஹெல்த்’ ஆய்வு ஒன்று.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank