ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.
முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகங்களில் நடத்தப்படும்.
முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment