பள்ளிக்கு மாணவர்கள் 3 கி.மீ. நடந்து செல்வதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்.
கல்வி பயில்வதற்காக மாணவர்கள் 3 கி.மீ. தூரம் நடந்து செல்வதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலம், பரப்பனங்காடி நகரில் 9-ஆவது வகுப்பு வரை உள்ள இளநிலைப் பள்ளிக்கு, 12-ஆம் வகுப்பு வரை நடத்துவதற்கான மேல்நிலை அந்தஸ்தை அந்த மாநில அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு வழங்கியது. இதற்கு, அந்தப் பகுதியையொட்டிய மற்றொரு மேல்நிலைப் பள்ளி எதிர்ப்பு தெரிவித்தது.
அரசின் அந்த உத்தரவு, பள்ளிகளுக்கு மேல்நிலை அந்தஸ்து வழங்குவதற்கு முன்னர் அருகிலுள்ள மற்ற பள்ளிகளின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற கேரள கல்விச் சட்டத்தை மீறுவதாகக் கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் அந்தப் பள்ளி மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பரப்பனங்காடி பள்ளிக்கு மேல்நிலை அந்தஸ்து வழங்கும் அரசின் உத்தரவைத் தள்ளுபடி செய்தது. எனினும், இளநிலைப் பள்ளியால் 10-ஆம் வகுப்பில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்கள் மட்டும் தொடர்ந்து அந்தப் பள்ளியில் பயில நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து பரப்பனங்காடி இளநிலைப் பள்ளி, உயர் நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து, இதுதொடர்பாக அந்தப் பள்ளி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது தீர்ப்பில் கூறியதாவது:
பரப்பனங்காடி இளநிலைப் பள்ளியில் 9-ஆவது வகுப்பு தேறிய மாணவர்கள், 10-ஆவது படிக்க வேண்டுமென்றால் 3 கி.மீ. தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது.
10 முதல் 14 வரையிலான வயதுச் சிறுவர் சிறுமியர், படிப்பதற்காக 3 கி.மீ. தொலைவு நடந்து சென்றாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21(ஏ)-இன்படி கல்வி என்பது 14 வயதுக்குள்பட்ட சிறுவர்களின் அடிப்படை உரிமையாகும். அந்தச் சட்டப் பிரிவின் நோக்கம் சரியான முறையில் நிறைவேற வேண்டுமென்றால், மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு 3 கி.மீ. தொலைவுக்குள் மேல்நிலைப் பள்ளிகள் அமைய வேண்டியது அவசியமாகும்.
எனவே, பரப்பனங்காடி இளநிலைப் பள்ளிக்கு மேல்நிலைப் பள்ளி அந்தஸ்து வழங்கும் கேரள அரசின் உத்தரவை உறுதி செய்கிறோம் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
Comments
Post a Comment