குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: சிம்ம ராசி


தயவு தாட்சண்யமும் தாராள மனசும் கொண்ட நீங்கள், தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கி முன்னேறுபவர்கள்.

          இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு பணப் புழக்கத்தையும் கவுரவத்தையும் குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குரு பகவான் 02.09.2017 முதல் 02.10.2018 வரை மூன்றாவது வீட்டில் அமர்வதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்தோம் என்று பேசாமல் சில விஷயங்களில் சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள். எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் போகும்.

குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்களைப் பெரிதாக்க வேண்டாம். பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. யாரையும் அனாவசியமாக வீட்டுக்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். வெளியிடங்களிலும் நிதானமாகப் பேசுங்கள். ஆனால், உங்களின் ஏழாவது வீட்டைக் குரு பார்ப்பதால் உங்கள் உள்மனசு சொல்வதைக் கேட்டு நடந்துகொள்வீர்கள். ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். சாதுக்களுக்கு நெருக்கமாக இருப்பீர்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள்.

கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும் அன்னியோன்யமும் குறையாது. குரு பகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் தேவைக்கேற்ப பணவரவு இருக்கும். நெடுநாளாக அடகில் இருந்த நகைகளையும் மீட்பீர்கள். பழைய கடன் பைசலாகும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். அப்பா, மகனின் உறவு இனிக்கும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல்களுக்கு மாற்றுவழி கிடைக்கும். ஆனால், எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். மகளுக்கு உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார். குரு 11-ம் வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வாகனம் வாங்குவீர்கள்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் திறமைகள் வெளிப்படும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதர வகையில் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும்.
06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள்.
குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்குப் புது வேலை கிடைக்கும். திருமணம், கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குரு பகவான் செல்வதால் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வரும். தாயாரின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.
07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் காய்ச்சல், சிறுநீரகத் தொற்று வந்து செல்லும். ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கறாராக நடந்து கொள்ளாமல் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலியுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆனால், சக ஊழியர்கள் உங்களை மட்டம்தட்டிப் பேசுவார்கள்.
இந்த குரு மாற்றம் அவ்வப்போது குழப்பத்தையும் காரியத்தடைகளையும் தந்தாலும் திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமாகவும் கடின உழைப்பாலும் நினைத்ததை நிறைவேற்றித் தரும்.
பரிகாரம்:
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள வத்திராயிருப்பு எனும் ஊருக்கு வடக்கே உள்ள தம்பிப்பட்டி கிராமத்தில் மலையடிவாரத்தில் ஐக்கியமாகியுள்ள ஸ்ரீமாவூத்து உதயகிரிநாத சித்தரை வணங்குங்கள். கோதுமையைத் தானமாகக் கொடுங்கள். நிம்மதி கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022