விரைவில் சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா?
'நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், தமிழகத்தில், 45 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 434 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், வாகனங்களின் வகைக்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, கார் வைத்திருப்போர், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் போது, சுங்கக் கட்டணமாக மட்டும், 1,500 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. நாடு முழுவதும், இதே நிலை உள்ளதால், பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
2014 லோக்சபா தேர்தலின் போது, 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. பா.ஜ., அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும், சுங்கச்சாவடிகள் இன்னும் மூடப்படவில்லை.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய வாகனங்களை பதிவு செய்யும் போதே, சாலை வரி உள்ளிட்டவை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. அதன் பின்னும், சுங்கக் கட்டணம் செலுத்துவது தேவையற்றது என்ற கருத்து, வாகன உரிமையாளர்களிடம் உள்ளது. எனவே, சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment