தவறாக நடந்தால் என்ன செய்யலாம்? : பாட புத்தகங்களில் விளக்க திட்டம்
'மற்றவர்கள் தவறாக நடந்து கொள்வதை தவிர்ப்பது, அது போன்ற சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும்' என, பள்ளி மாணவர்களுக்கான விளக்கத்தை, பாட புத்தகங்களில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ள
து.
ஹரியானா மாநிலம் குருகிராமில், இரண்டாம் வகுப்பு மாணவன், பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்டது உட்பட, பள்ளி மாணவ - மாணவியரிடம் அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், மத்திய - மாநில கல்வி திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன் இயக்குனர், ரிஷிகேஷ் சேனாபதி கூறியதாவது: மற்றவர்களிடம் பழகும்போது, எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பதை மாணவ - மாணவியருக்கு விளக்க வேண்டும்.
இது குறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும் ஆலோசனை கூறினாலும், அனைத்து விஷயங்களையும் அவர்கள் சொல்வதில்லை. மாணவர்கள் பாதுகாப்புக்காக உள்ள சட்டம்உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாணவ - மாணவியருக்கு எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், இவை குறித்து அடுத்த ஆண்டில் இருந்து வெளியிடப்படும் என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களின் உள் அட்டையில் விளக்கம் இடம்பெறும். இதுபோன்ற தருணங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எங்கு புகார் அளிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு அவசரகால உதவி வழங்குவதற்கான தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment