குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மேஷ ராசி


       புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்கவைத்து 

பஞ்சாய் சிதறடித்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை 7-ம் வீட்டில் வந்தமர்வதால் குழம்பியிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். நினைத்தபடி உங்கள் வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். 
உங்களின் குடும்பத்தில் உங்களின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்யுமளவுக்குப் பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீட்டுக் கனவு நிறைவேறும்.
வங்கிக் கடனுதவி கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் சுருங்கியிருந்த முகம் மலரும். தோற்றப்பொலிவு கூடும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வீட்டில் தடைபட்ட விசேஷங்களெல்லாம் நடக்கும். அழகான வாரிசு பிறக்கும்.
இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீரும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் பதவி, பட்டம் பெறுவீர்கள். பழைய சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவிழாக்களில் மரியாதை கிடைக்கும். ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.
குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
02.09.2017 முதல் 05.10.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். திட்டவட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இனம் தெரியாத கவலைகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது மறக்காமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை அறிஞர்களின் அறிமுகம் கிட்டும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். என்றாலும் கனவுத் தொல்லையால் அவ்வப்போது தூக்கம் குறையும். வீண் அலைச்சலும் அதிகமாகும். நண்பர், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் வேலைச்சுமையால் படபடப்பு அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டி வரும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். தந்தையாரின் ஆரோக்கியம் பாதிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது உத்திகளைக் கையாளுவீர்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களைக் கூடுதலாக நியமிப்பீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்.
இந்தக் குரு பெயர்ச்சி அதலபாதாளத்தில் கிடந்த உங்களை உச்சிக்கு கொண்டுவருவதுடன் எதிலும் நிம்மதியையும் வெற்றியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் கோயில் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் மடத்தில் அமைந்திருக்கும் சமாதிக் கோயிலுக்கு பூரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வாருங்கள். வேர்க்கடலை தானமாகக் கொடுங்கள். நினைத்தது நிறைவேறும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)