சென்னையில் சர்வதேச அறிவியல் மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது


இந்தியாவின் சர்வதேச அறிவியல் மாநாடு சென்னையில் 4 நாட்கள் நடைபெறுகிறது என்று மத்திய மந்திரி ஹர்‌ஷவர்தன் கூறினார்.

மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டவும் இந்தியாவின் சர்வதேச அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. 2015–ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 13–ந் தேதி இந்த மாநாடு தொடங்குகிறது. சென்னை ஐ.ஐ.டி., மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இடங்களிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள். பாகிஸ்தான், இலங்கை மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் 2,100 மாணவ–மாணவிகள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர். அறிவியல் விஞ்ஞானிகள் 300 பேர் பங்கேற்கிறார்கள். 750 இளம் விஞ்ஞானிகளும் வருகிறார்கள். சர்வதேச அளவில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 12–வது இடத்தில் இருந்து 9–வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்தியா, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட அறிவியல் கதைகள் கொண்ட திரைப்படங்கள் மாநாட்டில் திரையிடப்படும். ஆழ் கடல் ஆய்வு மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து கருத்தரங்கு நடைபெறும்.
கின்னஸ் புத்தக சாதனைக்காக 1,000 பள்ளி மாணவர்களுக்காக உயிரியல் பாட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் செல் உயிரியல் குறித்த காணொலி காட்சி இடம்பெறும். மேலும் பப்பாளி பழங்களில் இருந்து அதன் மரபணுக்களை பிரித்தெடுக்கும் செயல்முறை நடத்தப்படும்.
புதுமை படைப்பாளர் போட்டிகள் தமிழக மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்படும். இந்த மாநாடு 16–ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஈடுபட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் எம்.ராஜீவன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தொழில்நுட்ப குழு ஆணையர் பழனிச்சாமி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)