நிலவேம்புக் குடிநீர் மட்டுமல்ல... டெங்குவைத் தடுக்க இன்னும் சில மருந்துகள்!

நாளுக்கு நாள் அதிகமாகிவரும் டெங்கு பாதித்தவர்கள் குறித்த செய்திகள் மிரளவைக்கின்றன. டெங்கு முதல் பன்றிக் காய்ச்சல் வரை விஷம்போல் பரவும் இந்த நோய்கள், கடந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கொள்ளை
நோய்களின் சோகத்தை கண்முன் நிறுத்துகின்றன. இன்றைக்குப் பிரபல நோயாக உருவெடுத்திருக்கிறது டெங்கு. இதோடு சேர்த்து, சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரும் இப்போது வெகு பிரபலமாகிவிட்டது என்றே சொல்லலாம். நிலவேம்புக் குடிநீர் போலவே, டெங்குவைத் தடுக்க இன்னும் சில எளிய மருந்துகளும் உள்ளன.

டெங்கு பாதிப்பு

சித்த மருந்துகள்

டெங்கு நோயைத் தடுப்பதில் பாரம்பர்ய மருத்துவத்துக்கான பங்கு மிக அதிகம். அந்த வகையில் ஜுர நோய்க்கான சிகிச்சையில், சித்த மருத்துவம் என்பது நிலவேம்புக் குடிநீரோடு மட்டும் சுருங்கிவிடுவதில்லை. நிலவேம்புக் குடிநீரோடு சேர்த்து, பப்பாளி இலைச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆடுதொடா இலைச் சாறு, பித்தக் காய்ச்சல் குடிநீர், அமுக்கராக்கிழங்குப் பொடி... எனச் சித்த மருந்துகளின் பட்டியல் மிக நீண்டது. நிலவேம்புக் குடிநீரோடு சேர்த்து, ஜுரத்துக்குப் பயன்படும் சித்த மருந்துகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்!

காய்ச்சல் வராமல் தடுக்க..!

’டெங்கு வராமல் தடுக்க என்ன செய்யலாம்’ என்பதுதான் இப்போது அதிகளவில் எழுப்பப்படும் கேள்வி. அதற்கான பதில் என்னவோ கொசுக்களை அழிப்பதும், நம்மைக் கடிக்காமல் பார்த்துக்கொள்வதும் என்ற அளவிலேயே இருக்கும். உண்மைதான். இருந்தாலும், அனைத்தையும் தாண்டி, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏடிஸ் கொசுக் கடித்தாலும், நம்மை டெங்கு தாக்காத அளவுக்கு நமது உடலை உறுதியுடன் வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியம். அதற்கும் சித்த மருந்துகள் உதவுகின்றன.

எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகள்!

ஜுரம் வருவதற்கு முன்னரே, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, அமுக்கராக்கிழங்குப் பொடி, நெல்லிக்காய் லேகியம், திரிபலா சூரணம் போன்றவற்றை மருத்துவரின் பரிந்துரையோடு உட்கொள்ளலாம். நிலவேம்புக் குடிநீரும் டெங்கு வராமல் தடுக்கும் சிறந்த பாதுகாவலர் என்றே சொல்லலாம். நோய் எதிர்ப்புச் சக்தி பெருக, குழந்தைகளுக்கு உரை மாத்திரையும் (உ-ம். மாசிக்காய், கடுக்காய், வேப்பங்கொட்டை உள்ளிட்டவை) கொடுக்கலாம். கைக் குழந்தைகளாக இருந்தால், தாய்ப்பாலை தவறாமல் கொடுப்பதே டெங்கு நோய்க்கான சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி மட்டுமே பயன்படுத்த வேண்டும்... சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக இருந்தாலும்! தவறாமல் மூன்று வேளை உணவு உட்கொள்வதும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறை.

நிலவேம்புக் குடிநீர்

நிலவேம்புக் குடிநீர்

நிலவேம்புக் குடிநீரைப் பற்றிய விழிப்புஉணர்வு மக்களிடம் பெருமளவில் அதிகரித்திருப்பது உண்மை. அடுத்த பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவரின் ஆலோசனையோடு நிலவேம்புக் குடிநீரை அனைவரும் அருந்துவது நல்லது. வயதுக்கேற்ற அளவு, முறை, தயாரிக்கும் வழிமுறை, அதில் சேரும் மூலிகைகள் என நிலவேம்புக் குடிநீரைப் பற்றி முழுமையான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பதினைந்து வயதுக்கு மேல் 30 மி.லி முதல் 50 மி.லி அளவுக்குப் பருகலாம். பதினைந்து வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கான அளவு மாறுபடும். காய்ச்சலைக் குறைக்கும், தடுக்கும் செய்கை (Antipyretic), வலிநிவாரணி செய்கை (Analgesic) என நிலவேம்புக் குடிநீருக்கான செயல்பாடுகள் அதிகம். ஜுரம் வருவதற்கு முன்னர் தற்காப்பு நடவடிக்கையாகவும், பாதிக்கப்பட்ட நிலையில் சிறந்த மருந்தாகவும் நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்தலாம்.

இப்போது டெங்கு அதிகளவில் பரவுவதைப் பயன்படுத்திக்கொண்டு, சில போலிகள் தரமற்ற நிலவேம்புக் குடிநீரையும் மக்கள் மத்தியில் வலம் வரச் செய்கிறார்கள். நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு, சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல் என மொத்தம் ஒன்பது மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் சில மூலிகைகள் இல்லாமலோ அல்லது சில மூலிகைகளுக்கு மாற்றாகவோ கலப்படமும் நடைபெறுகின்றன. இப்போது அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என இலவசமாக நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்குத் தேவையான நிலவேம்புக் குடிநீரையும் அருகிலுள்ள அரசு சித்த மருத்துவமனைகளை நாடி பள்ளி நிர்வாகங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க..!

டெங்குக் காய்ச்சலால் குறையும் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலைச் சாறு சிறந்தது. நம்மோடு தினமும் புழங்கும் பப்பாளி மரத்தை நாம் அதிகம் கண்டுகொள்வதில்லை. பப்பாளி இலைகளை நன்றாகக் கழுவி, சாறெடுத்து 10 மி.லி விகிதம் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை குடித்துவரலாம். ரத்தத் தட்டுக்களின் (Platelets) எண்ணிக்கையை மட்டுமல்லாமல், வெள்ளை ரத்த அணுக்களின் (W.B.C’s) எண்ணிகையையும் பப்பாளி இலைச் சாறு அதிகரிக்கும். இதைப்போலவே மலை வேப்பிலைச் சாற்றையும் பயன்படுத்தலாம். காய்ச்சலைக் குறைக்க கிராமங்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மூலிகை மலைவேம்பு.

மருத்துவரிடம் சிகிச்சை

டெங்கு

டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுவிட்டது… அடுத்தது என்ன செய்யலாம்?! பயம் வேண்டாம். காய்ச்சலைக் குறைக்க, நிலவேம்புக் குடிநீர், பிரமானந்த பைரவ மாத்திரை, திரிகடுகு சூரணம் என நிறைய மருந்துகள் இருக்கின்றன. ஆடுதொடா மணப்பாகு, ஆடுதொடா குடிநீர் சூரணம் போன்றவையும் டெங்குவுக்குப் பயன்படக்கூடிய சிறந்த சித்த மருந்துகள். யுனிவர்சல் மருந்தான தண்ணீரை மறந்துவிடக் கூடாது. நீரிழப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சுய மருத்துவம் மட்டும் வேண்டாம். டெங்குவில் சில வகையான மருந்துகள் விபரீதங்களை உண்டாக்கும். காய்ச்சல் வந்துவிட்டால் மருத்துவரிடம் சென்றுவிடுவது சிறந்தது.

தேவை ஒருங்கிணைந்த மருத்துவம்

இன்றையச் சூழ்நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இப்போது பெரும்பாலான இடங்களில் சித்த மருத்துவத்தோடு இணைந்து, ஆங்கில மருத்துவ முறையும் இயங்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம். எடுத்துக்காட்டாக, ஓர் அரசு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் செல்கிறார் என்றால், ஆங்கில முறை மருத்துவர் மற்றும் சித்த மருத்துவரால் பரிசோதிக்கப்படுவார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)