சுத்தம் கடைபிடிக்காத வீடுகளில் குடிநீர் 'கட் ' - தமிழக அரசு அதிரடி உத்தரவு


டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, 'கட்' செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அதிகாரிகள், வீடு தோறும் அதிரடி ஆய்வை துவக்கி உள்ளனர். சேலத்தில், நேற்று, 18 இடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு முழு முனைப்புடன், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
  சுத்தம்,கடைபிடிக்காத,வீடுகளில்,குடிநீர்., 'கட் ' 
தமிழகத்தில், 'ஏடிஸ்' வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலின் தாக்கம், ஐந்து ஆண்டுகளுக்கு பின், மக்களை மிரள வைத்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களிலும், குவிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், லட்சத்திற்கும் மேற்பட்டோர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 50 பேர் வரை, பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.
பகீரத முயற்சி
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொது நல அமைப்புகளுடன் இணைந்து, பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, டெங்கு பரவ, நன்னீரில் உருவாகும், 'ஏடிஸ்' கொசுக்களே காரணம் என்பதால், அவற்றின் உற்பத்தியை முற்றிலும் ஒழிக்க, நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன.வீடுகள், கடை கள், காலி மனைகள், கட்டுமான பணியிடங்கள், சேமிப்பு கிடங்குகள், திரையரங்குகள், சுங்கச்சாவடிகளில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
அங்கு, நன்னீர் தேங்கி, கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில், கழிவு பொருட்கள், உடைந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை இருந்தால், அப்புறப்படுத்த உத்தரவிடப்படுகிறது.இதன்படி, சுத்தம் செய்யாவிட்டால், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில்,தமிழக பொது சுகாதார சட்ட பிரிவு, 134 - 1ன்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. 
சென்னையில், 3,000 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், 30 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி, சுத்தத்தை பராமரிக்காத வீடு, கடை, நிறுவனங்களிடம் 
இருந்து, அபராதமாக, ஐந்து கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, சுத்தத்தை பராமரிக் காத வீடுகள், கடைகள், நிறுவனங் களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் பரவ, நன்னீரில் உருவாகும், 'ஏடிஸ்' கொசுக்களே காரணம். இதை, மக்கள் நன்கு உணர்ந்திருந்தாலும், தங்கள் வீடு, குடியிருப்பை சுத்தமாக வைத்திருப்பதில்லை. 
மக்களே தங்களை அறியாமல், கொசு உற்பத்தியை அதிகரிக்க வழி செய்து, டெங்கு பரப்ப காரணமாக இருந்து வருகின்றனர். எனவே, டெங்கு ஒழிக்க, வீடு வீடாக ஆய்வுகள் தொடர்கின்றன.மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளும், இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதுவரை, சுத்தம் பராமரிக்காத வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, குடிநீர் இணைப்பை துண்டிக்கும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.மக்களுக்கு தண்டனை தர வேண்டும் என்பது, அரசின் நோக்கம் அல்ல. டெங்கு காய்ச்சலால், அடுத்த உயிர் இழப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சேலத்தில் அதிரடி
இதன் தொடக்கமாக, சேலம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. மாநகராட்சி கமிஷனர், சதீஷ் உத்தரவின்படி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மண்டலங்களில், 11 வார்டுகளில், மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 18 இடங்களில், டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், 56 ஆயிரம்ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில், கலெக்டர் ரோகிணி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார். நேற்று காலையும், அதிரடி சோதனை நடத்தினார். அப்போது, ஆண் நர்ஸ் கள் ஓய்வு அறையில், எலி இறந்து கிடந்தது; துர்நாற்றம் அடித்தது. மாணவியர் விடுதி, காசநோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ மனையை சுற்றிய பல பகுதிகளிலும், தண்ணீர் தேங்கியும், சுகாதார சீர் கேட்டுடன், கொசு உற்பத்தி மையமாக மாறி இருந்தது.
இதையடுத்து, துாய்மை பணிக்கான ஒப்பந்த நிறுவனத்தினரிடம், 100 சதவீதம் துாய்மை பணியை செய்ய உத்தரவிட்டார். 
'நோயாளிகளும்,பார்வையாளர்களும், டெங்கு ஒழிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, கலெக்டர் ரோகிணி வலியுறுத்தினார்.
கமிஷனர் பதற்றம்
ஈரோடு மாநகராட்சி சார்பில், டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், 'எங்கள் வார்டில் சுகாதாரப்பணி நடக்கவில்லை; சுகாதார ஆய்வாளரை பார்த்ததே இல்லை' என, முதியவர் ஒருவர் குற்றம் சாட்டினார். இதனால், கமிஷனர், சீனி அஜ்மல்கான் பதட்டமானார். பின் சுதாரித்து, 'கொசு ஒழிப்பில், அனைவரும் இணைந்து செயல்படுவோம்' எனக்கூறி, சமாளித்தார்.
சுங்கச்சாவடிக்கு அபராதம்
வேலுார் மாவட்டம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில், கலெக்டர் ராமன் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் நேற்று காலை, அதிரடி சோதனை செய்தனர். அப்போது, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், பழைய டயர்கள், இரும்பு கம்பிகள், பெயின்ட் டப்பாக்கள் தேங்கி கிடந்தன. அதில், மழை நீர் தேங்கி, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தன. இதையடுத்து, சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட கலெக்டர், ராமன் உத்தரவிட்டார். 
சுகாதார திட்டத்தில் சாதித்தவர்
மஹாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், உப்பலாயி என்ற குக்கிராமத்தை சேர்ந்த விவசாயி, ராம்தாசின் மூன்றாவது மகள், ரோகிணி, 33. பி.இ., முடித்த இவர், 2008ல் தன், 23வது வயதில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, முதல் முயற்சியில், ஐ.ஏ.எஸ்., ஆனார்.
மதுரை மாவட்ட, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த, கூடுதல் கலெக்டர் ரோகிணி, இந்தாண்டு, ஆக., 28ல், சேலத்தின் முதல் பெண் கலெக்டராக பொறுப்பேற்றார். கணவர் விஜயேந்திர பிதரி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக, மத்திய அரசு பணியில் உள்ளார்.
மதுரையில்,கூடுதல் கலெக்டராக பணியாற்றிய போது, மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், அனைத்து கிராமங்களும் கழிப்பறை வசதி பெற வேண்டும் என்பதற்காக, முழு முயற்சி மேற்கொண்டார்.இதற்காக, மத்திய அரசின் பாராட்டு பெற்றார். 2016ல், மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், 26 மாநில கலெக்டர்கள், கூடுதல் கலெக்டர்களை அழைத்ததில், தமிழகத்தில் இருந்து சென்றது, இவர் ஒருவர் தான். சேலத்தில் பொறுப்பேற்றது முதல், 'டெங்கு' ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சுத்தம் இல்லாத வீடுகள் மற்றும் நிறுவனங்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank