மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு CBSE அறிவிப்பால் உற்சாகம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது. பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.
திருப்பி அனுப்பும்
நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.இ., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், 'மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்' என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.'பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றலாம்' என, தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் - லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.இ., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
தேர்வு எழுத வாய்ப்பு
இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது.
Comments
Post a Comment