பங்கு முதலீட்டு லாபம் வழங்கப்படுவதால் பிஎப் வட்டி குறைக்க மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் உள்ள பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-17 நிதியாண்டில் வட்டி விகிதமாக 8.65 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில் இந்த வட்டித்தொகை மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிஎப் பணம் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 32,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைத்த லாபம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. பங்கு முதலீட்டில் லாபம் கிடைத்தாலும், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பிற முதலீடுகளில் குறைந்த அளவு லாபமே கிடைத்துள்ளது. எனவே வட்டியை குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நடப்பு ஆண்டிலும் கடன் பத்திரங்கள் முதலீட்டில் குறைந்த லாபம் கிடைத்துள்ளதாலும், பங்குச்சந்தை முதலீட்டில் கிடைத்த லாபம் யூனிட்களாக சந்தாதாரர் கணக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாலும் வட்டியை குறைக்க வேண்டியுள்ளது. இருப்பினும் நடப்பு ஆண்டில் தொழிலாளர்களுக்கு எவ்வளவு வட்டி தர முடியும் என்று கணக்கீடு செய்து வருகிறோம். கடந்த நிதியாண்டில் 4.5 கோடி பிஎப் சந்தாதார்களின் கணக்கில் உள்ள பணத்துக்கு வட்டியாக 8.65 சதவீதம் வழங்கப்பட்டது. பிஎப் பணத்தில் முதலீடு செய்த தொகையை எவ்வாறு மதிப்பீடு செய்வது என பெங்களூரு ஐஐஎம் அறிக்கை அளித்துள்ளது. ஐஐஎம் உடன் சேர்ந்து யூனிட்கள் வழங்குவது பற்றி மதிப்பீடு செய்யப்படும்.
பிஎப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும்போது இந்த யூனிட்கள் பங்குச்சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு பணமாக மாற்றி வழங்கப்படும். பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் தேவை ஏற்பட்டால் இடிஎப் யூனிட் தொகை அல்லது ரொக்கத்தொகை இவை இரண்டில் எவற்றில் இருந்தும் பணம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். சந்தாதாரர்கள் அனைவரும் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் மற்றும் பங்குச்சந்தை யூனிட் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
Comments
Post a Comment