ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளனர். தமிழக ரேஷன் கடைகளை,
கூட்டுறவு சங்கங்களும், நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன. தற்போது, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் பணிக்கு, 4,000 ஊழியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.
அதற்கான விண்ணப்பம் அளித்தல், நேர்காணல் போன்ற பணிகள், மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் நடக்கின்றன. ரேஷன் ஊழியருக்கு, பணியில் சேர்ந்தநாளில் இருந்து, ஓராண்டு வரை தொகுப்பு ஊதியமாக, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஓராண்டிற்கு பின், அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாயும், அதனுடன் ஆண்டுக்கு, 2.5 சதவீதம் ஊதிய உயர்வும் அளிக்கப்பட இருக்கிறது.
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி இருந்தால் போதும். அவருக்கு, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் கிடையாது. ஆனால், தற்போது, பல மாவட்டங்களில், ரேஷன் வேலைக்கு வந்துள்ள விண்ணப்பங்களில், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளதாக, மாவட்ட இணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து, தகவல் கிடைத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment