செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்க புதிய நடைமுறை: ஜனவரி முதல் வாரத்துக்குள் அமல்படுத்த வாய்ப்பு


செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை எளிதாக இணைப்பதற்கு புதிய நடைமுறைகளை ஜனவரி முதல் வாரத்துக்குள்
அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் நலத் திட்டங்களைப் பெறஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், மற்ற சேவைகள் பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் உள்பட பல்வேறு சேவைத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை 2018- ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி மூலம் பல்வேறு சேவைகள் வழங்கி வரும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதாரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆதார் எண்ணை இணைக்க அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதற்கிடையில், செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை எளிதாக இணைப்பதற்கு ஓடிபி நடைமுறையும், ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த அறிவிப்பின்படி, இதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதையடுத்து, இந்த புதியமுறைகள் ஜனவரி முதல் வாரத்துக்குள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியது: இந்த முறையில் மூத்த குடிமக்களுக்கு பதிவு செய்வதில் உள்ள சிரமம் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் உள்ள சில சிரமங்களை தீர்க்கும் வகையில் புதிய முறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடைகளில் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கும்போது, பணம் செலுத்துவதில் உள்ள சிரமம், ஆதாரில் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களை முதலில் பதிவு செய்து பின்னர் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஆகியவை எளிதாக செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது என்றனர் அதிகாரிகள்.

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு பணி தீவிரம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் கடந்த 5 மாதமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை தொலைபேசி வட்டத்தில் 12 லட்சம் செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 4.5 லட்சம் பேரின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது. தினமும் 3,000 முதல் 4,000 பேரின் செல்லிடப்பேசி எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

 தமிழ்நாடு வட்டத்தில் 75 லட்சம் சந்தாதாரர்களில் 37 லட்சம் சந்தாதாரர்களின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 70 கோடிக்கும் மேலான செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)