ஹார்வர்ட் தமிழ் இருக்கை.... (உங்கள் புரிதலுக்காக)


உலகில் சுமார் 7102 மொழிகள் உள்ளன. இவற்றுள் 7 மொழிகளை பாரம்பரிய/தொன்மை மொழிகளென வகைப்படுத்தியுள்ளனர்,
மொழி ஆராய்ச்சியாளர்கள். இவை சமஸ்கிரதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், பாரசீகம் மற்றும் நமது தமிழ் மொழி. இந்த 7 மொழிகளில் 6 மொழிகள் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகின்றன.

ஆனால் தொன்மையும், நுண்மையும், வன்மையும்
மென்மையும், செம்மையும், செழுமையும், வளமையும், இளமையும், ஈடில்லா இலக்கணக் கட்டமைப்பும், இணையில்லா இலக்கியச் சிறப்பமைப்பும் தன்னகத்தே கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு இதுவரை அங்கு நிரந்தர இருக்கை இல்லை. எட்டு கோடிக்கு மேற்பட்ட ஓர் இனம் பேசும் மொழி இன்னும் சிம்மாசனம் ஏற்றப்படாமலே சிறைபட்டு நிற்கிறது. 
இதனால் மருத்துவர்கள் ஜானகிராமன் அய்யாவும், திருஞான சம்பந்தம் அய்யாவும், விஜயலட்சுமி அம்மா மற்றும் சங்கத் தமிழுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்து கொண்டிருக்கும் வைதேகி ஹெர்பர்ட் அம்மா கூறிய ஆலோசனைப்படி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நிரந்தர தமிழ் இருக்கை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். 
அய்யா ஜானகிராமனும், அய்யா திருஞானசம்பந்தமும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துடன் உரையாடல்கள் நடத்தி தங்கள் சொந்த பணம் தலா 500 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலுத்தி இந்த ஹார்வர்ட் தமிழ் இருக்கையெனும் விதையை தமிழுக்காக விதைத்தனர். 
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நிரந்தர தமிழ் இருக்கைக்காக கேட்டிருப்பது 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த 6 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 3.5மில்லியன்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் செயற்குழு, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களால் திரட்டப்பட்டுவிட்டது. மேலும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை தமிழக அரசு கொடுத்துள்ளது. இன்னும் 1 மில்லியன் டாலர்கள் ஜூன் 2018 க்குள் தேவைப்படுகிறது. 
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சாதாரண ஒன்றல்ல. 381 ஆண்டுகள் ஆயுள் கொண்ட அற்புதமான உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகம் இது. மிகப் பெரிய அறிவாளிகளையும் மிக உயர்ந்த ஆளுமைகளையும், உலகத் தலைவர்களையும், மிக அபூர்வ சிந்தனையாளர்களையும், உற்பத்தி செய்து உலகிற்கு அளித்துக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் கல்வி சாலை இது. 
இந்தப் பல்கலைக்கழகத்தில் நம் தமிழ் மொழி அமர்ந்தால் தகுதி மிக்க, அறிவிற் சிறந்த ஓர் பேராசிரியர் நம் தமிழை முன்னெடுத்துச் செல்ல அங்கே நிரந்தரமாக அமர்வார். 
மாணவர்கள் இவரிடம் கல்லூரி அளவிலான தமிழ் இலக்கியப் பாடங்கள் படிக்க வருவர். தமிழைத் திறனாய்வு செய்வர். தமிழ் பற்றி நாமறியாத நல்ல நல்ல செய்திகள் எல்லாம் ஆவணங்களாக உலகிற்கு தருவர். 35 ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து ஆவணம் தந்ததால் தான் இன்று அதன் பயன்கள் உலகெலாம் பரவி கிடக்கிறது. 
இந்தப் பல்கலைக்கழகத்தில் நம் தமிழ் இலக்கியம் கற்பிக்கப்பட்டாலும், திறனாய்வு செய்யப்பட்டாலும் அது தமிழின், தமிழனின் பாரம்பரியத்தை, பண்பாட்டை கலாச்சாரத்தை, ஒழுக்கத்தை, அறத்தை, அன்பை, ஈகையை, பெண்களைப் போற்றிய தன்மையை, போர்த்திறத்தை, புத்திசாலித்தனத்தை, கல்வியை, அறிஞர் பெருமக்களை, கவிஞர் குழாம்களை, மக்களின் வாழ்வியலை, வரலாற்றை, வானவியலை, ஞானத்தை, கணிதத்தை, தமிழ் அரசர்களின் ஆளுமையை, தேசத்தின் செழுமையை, நிர்வாகத் திறமையை, கடவுள் பக்தியை, அறிவு சார்ந்த இயல்பை, இந்த உலகத்தின் காதுகளுக்கு ஆய்வுகளாய், சரித்திரச் சான்றுகளாய் நிரூபிக்க வாய்ப்புக்காக வழி. பழைய பல நூல்கள் புதிய பொலிவோடு உலக அரங்கில் உலா வர நாம் போடும் சாலை. 
அதற்காகவே நம் ஒட்டுமொத்த தமிழினமும், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட நண்பர்களும் தங்களால் இயன்றதை தமிழுக்காக தந்து கொண்டிருக்கின்றனர். 
நீங்களும் முடிந்ததைக் கொடுங்கள், நம் முத்தமிழ்த் தாயை உலக சபைகளிலெலாம் அரங்கேற்ற. 
தமிழ் வாழ்க
தமிழே ஆள்க 
- புவனா கருணாகரன் 
- நியூ ஜெர்சி, வட அமெரிக்கா 

Dear friends 
The above write up is for a better understanding of what HTC is all about and where the fund raising is at this time. 
We have an important responsibility to take our language and heritage to our future generations . 
It's time for all thamizh people from all over the world to come together for the love of our language. 
Please attend your local event 👇 or donate at www.harvardtamilchair.org 
Thank you

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)