தபால் நிலையங்களில் பதிவு செய்தால், தனியார் நிறுவனங்களில் வேலை!

தபால் நிலையங்களில் பதிவு செய்தால், தனியார் நிறுவனங்களில் வேலை! புதிய திட்டம்!

வேலைதேடி அலைபவரா நீங்கள்? உங்களுக்கான இனிப்பான செய்திதான் இது! அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களுக்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவுசெய்தால் போதும். இனி நீங்கள் வேலைதேடி அலையத் தேவையில்லை. உங்கள் தகுதிக்கேற்ற வேலை, தனியார் நிறுவனங்களிலிருந்து உங்கள் வீடுதேடி வரும்.

அரசுத் துறைகளில் வேலை என்பது பெரும்பாலான இளைஞர்களுக்குப் பெருங்கனவாகி விட்டது. படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற அரசு வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. அதே நேரத்தில், ஊழியர்களின் திறமைகளுக்கேற்ப தனியார் நிறுவனங்களும் இளைஞர்களுக்குத் தாராளமாகச் சம்பளத்தைக் கொடுக்க முன்வந்துள்ளன. 
இதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.
ஆனால், எந்த நிறுவனத்தில், எப்போது வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விவரங்கள், அவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் அந்த வாய்ப்பை வேலை தேடுவோர் நழுவவிட நேரிடுகிறது. இனி தபால் நிலையங்கள் மூலமாக எளிதாக உங்களுக்குத் தேவையான வேலை குறித்த விவரங்கள் உங்கள் வீடுதேடி வரும் என்பதால், இனி அந்தக் கவலை தேவையில்லை. 
தபால் துறையின் புதிய சேவை 
பொதுவாக தபால் நிலையங்களில் பதிவுத் தபால், விரைவுத் தபால், சேமிப்புத் திட்டங்கள், பார்சல் டெலிவரி எனப் பலவிதமான சேவைகள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் வேலை இல்லா இளைஞர்களுக்காக, அவரவர் தகுதிக்கேற்ற வேலைகளைத் தனியார் நிறுவனங்களில் ஏற்படுத்திக் கொடுக்கும் மையமாக தபால் நிலையங்கள் தற்போது மாறிவருகின்றன. இதற்காக 'நேஷ்னல் கேரியர் சர்வீஸ்' என்ற வேலைவாய்ப்பு சேவை மையங்கள் தலைமை தபால் நிலையங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்திய தபால்துறையும், மத்திய தொழிலாளர் நலத்துறையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இதைச் செயல்படுத்தவுள்ளனர். அந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலை தேடுபவர்கள் தலைமை தபால் நிலையங்களுக்குச் சென்று தங்கள் விவரங்களைப் பதிப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை, எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
பதிவு செய்வது எப்படி? 
இதுகுறித்து நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளர் சுந்தரி, "தபால் துறையின் இணையதளத்தில் வேலை தேடுபவர்களின் தகவல்களைப் பதிவு செய்வோம். பதிவு செய்வதற்கு மதிப்பெண் பட்டியல், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என எவ்வித ஆவணங்களையும் பதிவு செய்வோர் கொடுக்கத் தேவையில்லை. பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றின் எண் போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டும் கொடுத்தால்போதும். அதற்காக நகல்கூட தபால் நிலையங்களில் கொடுக்கத் தேவையில்லை. வேலை தேடுபவர்கள் இணைய தளத்தில் தாங்களாகப் பதிவு செய்து கொள்ளமுடியாது. தபால் நிலையத்தின் மூலமாகவே பதிவு செய்ய முடியும். 
இணையம் மூலம் ஒரு இணைப்புப் பாலம்! 
தற்போது 52 பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தபால் துறையின் இணையதளத்தில் பதிந்திருக்கிறார்கள். வேலை தேடுபவர்களின் விவரங்களை தபால்துறையின் இணையதளத்தில், நாங்கள் பதிவு செய்வோம். பிளம்பிங், கார்பென்டர், வெல்டர், மெக்கானிக், மென்பொருள் பொறியாளர், தொழில்நுட்பப் பிரிவு வேலைகள் என அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களின் விவரங்கள் இருக்கும். தனியார் நிறுவனங்களில் வேலைதேடும் நபர்களின் விவரங்கள், தபால்துறையின் இணையதளத்தில் இருக்கும். அந்தத் தகவல் தொகுப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள், நேர்முகத்தேர்விற்கு அழைப்பார்கள். வேலைக்கு ஆட்கள் தேடும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இருவருக்கும் இணைப்புப் பாலமாக தபால்துறை செயல்படுகிறது. தற்போது காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் மட்டும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 52 தொழில் நிறுவனங்கள் தபால் துறையிடம் ஒப்பந்தம் செய்து இருக்கின்றன. அந்த அடிப்படையில் 3000 வகையான வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன. 
கட்டணம் எவ்வளவு? 
தபால் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிந்து கொள்வதற்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகவல்களை அப்டேட் செய்வதற்கு 5 ரூபாய். பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் நகல் எடுக்க 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள 811 தலைமை தபால் நிலையங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது" என்றார். 
வேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை. ஆல் தி பெஸ்ட்

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)