ஆன்லைன் வழியே ஐந்து கட்டங்களாக நடைபெறும் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்!
இன்ஜினீயரிங் படிப்பில் சேர இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியே கவுன்சலிங் நடைபெற இருக்கிறது. ``ஆன்லைன் கவுன்சிலிங் ஐந்து கட்டங்களாக நடைபெறும்.
ஆன்லைன் கவுன்சிலிங் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் 44 பொறியியல் சேர்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்படும்" என்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.
முதல்முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங் எவ்வாறு நடக்க இருக்கும் என்பது குறித்து விவரித்த உயர்கல்வி அமைச்சர், ``இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் ஆன்லைன் வழியே நடைபெறும். இனி, மாணவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய அவசியமில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வதும், சென்னையில் வந்து தங்குவதும், இதர அசௌகரியங்களும் இனி இருக்காது" என்றார்.
ஆன்லைன் கலந்தாய்வுக்காக என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது? என்ற கேள்விக்கு, ``மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியே பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இணையவசதி இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், 44 இடங்களில் பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும். இந்த மையங்கள் அரசு பொறியியல் கல்லூரிகளிலும், அரசு பாலிடெக்னிக்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளிலும் அமைக்கப்படும். இந்த உதவி மையங்கள் எந்தெந்த இடங்களில் அமைக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்து கண்டறிந்திருக்கிறோம். இந்த மையங்களுக்கு மாணவர்கள் அதிகளவில் பயணிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஒவ்வொரு மாவட்டத்தின் பரப்பளவு மற்றும் கடந்த காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் மையங்கள் அமைக்கப்படும்" என்றார் அமைச்சர். ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடைபெறும் என்பதை குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் விளக்கினர்.
ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஐந்து படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில், விண்ணப்பிக்கும் மாணவர், பயனாளரின் (User Name) பெயரையும், கடவுச்சொல்லையும் (Password) உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து, மாணவர்களின் தகவலை பதிவுச் (Registration) செய்ய வேண்டும். பதிவுக்குப் பின்னர், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500-யும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் ரூ.250-யும் ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும்.
மாணவர்கள் விவரங்களைப் பதிவு செய்யும்போது, சரியான தகவலை பதிவு செய்திருக்கிறார்களா என்பதைச் சரி பார்ப்பதற்கு மாணவர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் சேர்க்கை உதவி மையங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த உதவி மையங்களையும் மாணவர்கள் பதிவு செய்யும் போதே அவர்களுடைய விருப்பத்துக்குத் தகுந்தாற்போல் தேர்வு செய்துகொள்ளலாம்.
மாணவர்கள் பதிவு செய்யவும், மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்யவும் உதவி மையத்தை அணுகலாம். அவ்வாறு அணுகும்போது பயனாளரின் பெயரையும், கடவுச்சொல்லையும் உருவாக்கி பிரிண்ட் எடுத்து வழங்கப்படும். சான்றிதழ்களை சரிபார்க்க வரும் மாணவர்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், எந்த நேரத்தில் மாணவர் வர வேண்டும் என்ற தகவலை மாணவர் பதிவு செய்த மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்தச் சமயத்தில் மாணவர் உதவி மையத்துக்கு வந்தால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு என ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஏதேனும் தவறாக தகவல் பதிவு செய்திருந்தாலும் அதனைச் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது திருத்தம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும். உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் அடங்கிய விவர கையேடு வழங்கப்படும். மேலும், ஆன்லைன் கவுன்சிலிங்கில் கல்லூரியை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த விடியோ படம் திரையிட்டு காண்பிக்கப்படும்.
அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்ட பின்பு, தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை ஒரு வாரக் காலத்துக்குள் பொறியியல் சேர்க்கை அலுவலகத்தை அணுகி மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
இறுதியாகத் தரவரிசை வெளியிடப்பட்டு, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 1 முதல் 15,000 வரை உள்ளவர்கள் முதல் குழுவாகவும், 15001 முதல் 40,000 வரை உள்ளவர்கள் இரண்டாவது குழுவாகவும், 40,001 முதல் 70,000 வரை உள்ளவர்கள் மூன்றாவது குழுவாகவும், 70,001 முதல் 1,05,000 வரை உள்ளவர்கள் நான்காவது குழுவாகவும், 1,05,001 பின்பு உள்ளவர்கள் அனைவரும் ஐந்தாவது குழுவாகவும் பிரிக்கப்படுவார்கள்.
மற்ற மாநிலங்களில் ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் நடத்தினாலும் இதுபோல் குழுவாக பிரிப்பதில்லை. தமிழகத்தில் கிராம மாணவர்களும் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் குழுக்களாக பிரித்து கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தரவரிசைப்பட்டியலில் 1 - 15,000 வரை உள்ளவர்கள் முதலில் ஆன்லைன் வழியே கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள், கவுன்சலிங்கில் கலந்துகொள்ளவதற்கான முன் வைப்புத்தொகை கட்டணத்தை செலுத்தி (பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ.5,000 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.1000), தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும் மற்றும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்யலாம்.
ஆன்லைன் வழியாக விருப்ப கல்லுரிகளையும், பாடத்தையும் வரிசைப்படி தேர்வு செய்ய மூன்று நாட்கள் வழங்கப்படும். மாணவர்கள் எத்தனைக் கல்லூரிகளை வேண்டுமானாலும் சேர விருப்பத்தைத் தெரிவிக்கலாம். கல்லூரிகளின் பெயர், கல்லூரிக்கு என்று ஒதுக்கப்பட்ட எண், பாடங்கள், மாவட்டம், அஞ்சல் குறியீடு என ஐந்து வகைகளில் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
தற்காலிக இட ஒதுக்கீட்டில் உள்ள கல்லூரியை உறுதி செய்ய இரண்டு நாட்கள் வழங்கப்படும். இதில் மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லாமா, வேண்டாமா என்று இரண்டு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இறுதி இட ஒதுக்கீடு பட்டியல் வழங்கப்படும். இச்சுற்றில் மாணவர்களுக்குச் சரியான கல்லூரி தேர்வு செய்யாத பட்சத்தில் அடுத்த சுற்றில் கலந்துகொண்டு கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.
கல்லூரியைத் தேர்வு செய்து இறுதி செய்யப்பட்ட பின்னர், உதவி மையத்துக்குச் சென்று ஒதுக்கீட்டு ஆணைப்பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நிலையிலும் மாணவர் பதிவு செய்த மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தியும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி அறிவிப்புகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
உதவி மையத்தில் வழங்கப்பட்ட விவர கையேட்டில், கல்லூரியின் பெயர், கல்லூரிக்கான குறியிட்டு எண், அந்த கல்லூரியில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அந்த படிப்புக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற்றிருக்கிறதா, படிப்பை எப்போது ஆரம்பித்தார்கள் என்ற விவரங்களை அறிந்து சரியான கல்லூரியை ஆன்லைனில் குறிப்பிட வேண்டும்.
யாருக்கு கிடையாது?
விளையாடு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழிற்துறை (Vocational Course) படிப்புக்கான கலந்தாய்வு எப்போதும்போல சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். இதைத்தவிர, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களால் நிரப்பப்படாத இடங்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வுகள் நேர்முகக் கலந்தாய்வாகவே நடைபெறும்.
எப்போது பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்?
பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 16-ம் தேதியுடன் முடிய இருக்க இருக்கிறது. மே மாதம் 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறது பள்ளிகல்வித்துறை. மே மாதம் மூன்றாவது வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிடும்.
Comments
Post a Comment