சித்தா படிக்க ஆசையா? : 'நீட்' தேர்வு எழுதுங்க!
'சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக ஆயுஷ் டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர், சுகதன் கூறியதாவது:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதேபோல, இந்தாண்டு முதல், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளில் சேரவும், நீட் தகுதி தேர்வு கட்டாயமாகியுள்ளது.இதுகுறித்த சுற்றறிக்கையை, அனைத்து மாநிலங்களுக்கும், ஆயுஷ் அமைச்சகம் அனுப்பியுள்ளது. அலோபதி மற்றும் ஆயுஷ் என, இரண்டிற்கும், ஒரே நீட் நுழைவு தான் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, மார்ச், 9 கடைசி நாள். எனவே, ஆயுஷ் எனப்படும், இந்திய மருத்துவ முறை படிக்க விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment