மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும்
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே.. என்பது பிரபலமான திரைப்படப்பாடல்.
ஆம் ! இந்த மண்ணில் பிறக்கிற எல்லா குழந்தைகளும் நல்ல மனநிலையில் தான் பிறக்கிறார்கள் .கள்ளம் கபடம் அற்ற அன்பின் வடிவம் தான் குழந்தைகள். அம்மா பிடிக்குமா , அப்பா பிடிக்குமா என்று கேட்டால் குழந்தை தலையை ஆட்டி , புன்னகை புரிந்து , உதட்டில் விரலை வைத்து மழலை மொழியில் இருவரையும் பிடிக்கும் என்று மனதைப் புண்படுத்தாமல் கூறும் வார்த்தையில் பொதிந்துள்ள மனநல சிந்தனையை நம்மில் பலர் அறிந்ததில்லை . . அப்படிப்பட்ட கள்ளம் கபடம் அற்ற உள்ளம் வஞ்சகம் , குரோதம் , பழி வாங்கும் உள்ளமாக மாறுவதன் காரணம் என்ன என்பதை சிந்திக்க வேண்டும்
குழந்தைகளின் மனநல பாதிப்புக்கான காரணங்கள் :
புரியாத வயதில் இளம் பெண்கள் தாய்மையடைந்து குழந்தைகளை அனாதையாக விடுதல் ,
இளம் வயது திருமணம்,
குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் ஒழுக்கப்பிரச்சினை , சந்தேகம் , பொருளாதாரம் சம்பந்தமாக தினமும் தொடரும் சண்டைகள் , பிரிவுகள், விவாகரத்துக்கள் என்பனவற்றைப் பார்த்து
அனுபவிக்கும் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கப்படுகிறது .
அவசர உலகில் தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்வது தேவைதான். அன்பிற்காகவும் , அரவணைப்பிற்காகவும் ஏங்கும் குழந்தைகளை அன்புடன் வாரி அணைத்து வளர்க்க ஆர்வமுடன் இருக்கும் தாத்தா பாட்டி போன்ற உறவுமுறைகள் இருக்கும் போது வேலைக்காரர்களுடனும் வேறு இடங்களிலும் விடுவது , பாலூட்டும் வயதில் ஏங்க வைப்பது , தாய் மடியில் விளையாடி இன்பம் பெறத் துடிக்கும் வயதில் அன்பை மறந்து வீண் வார்த்தைகள் பேசுதல் , அடித்தல் , கதவைப் பூட்டி வைத்து விட்டு வெளியே செல்லல் போன்றவை மனநிலையைப் பாதிக்கும்.
விரல்களைப் பிடித்து எழுத உறுதி அடைய முன்னர் எழுதவித்தல் , மழலை மாறாத வயதில் பள்ளிக்கு அனுப்புதல், பள்ளிக்கு செல்லும் முன்பே படி படி எனத் துன்புறுத்தல் , சொற்களை எழுதும்படி வற்புறுத்துதல் என்பனவும் மனநிலையைப் பாதிக்கின்றன.
பள்ளி வகுப்பறையில் ஏற்படும் மனநிலை பாதிப்புகள் :
குழந்தைகள் பள்ளிக்கு வருகை தருவதற்கு முன் அனுபவித்த மனநல அனுபவங்கள் , அவர்களின் நடத்தையை மாற்றக்கூடிய வகையில் அமைகின்றன.
குழந்தைகளின் மனநல இயல்புகள் வெளிப்படையாக தெரியும் ஒரு வகை இருப்பினும் வெளியே புலப்படாமல் தமக்குள்ளே அனுபவித்துக் கொண்டிருப்பதும் ஒருவகையினர். வகுப்பறையில் கட்டுப்படாமல் தம் விருப்பப்படி ஓடித்திரிதல் , வெளியே செல்லல் , பக்கத்தில் இருப்பவர்களை கிள்ளுதல் நிறைவேறாத ஆசைகளின் தாக்கம் காரணமாகக் களவாடுதல் , அதனை மறைப்பதற்குப் பொய் கூறுதல், எதிர்த்தல் , முறைத்துப் பார்த்தல் , தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தல், அடித்தல் , பென்சிலால் தாக்குதல், ஒழுக்கச் செயற்பாடுகளை மீறுதல் போன்றன ஒருவகையாகும்.
வன்முறை தண்டனைகளுக்குப் பயந்து மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பண்பு வேறுவகை. வகுப்பறைகளில் தனிமையை நாடுதல் , பயந்த சுபாவம் , ஆசிரியரைக் கண்டால் பயந்து நடுங்குதல் , முன்னே எழுந்து நடப்பதற்கு , பேசுவதற்கு பயப்படுதல் ,பிறர் தன்னைப் பார்க்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் எனப் பயப்படுதல் என்பன இவர்களின் நடத்தையாகும்.
சில உளநலப் பாதிப்புக்கள் வெளியில் தென்படுவதில்லை. பொறாமை , பிறருடன் கலந்து பழகாமை , பிறருக்கு உதவி செய்யாமை. சுயநலம் , தெரிந்தவற்றை புரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமை
ஒருபுறம். புத்தகங்கள் , குறிப்புக்கள் முக்கிய கருவிகளை களவாடுதல் . நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மனதைப் புண்படுத்தல் , வீண்பழிகளைச் சுமத்தல் , காரணமின்றித் தாக்குதல் என்பன ஒருவகையாகும்.
இவ்வாறான குழந்தைகளை மனநல சிந்தனையுடன் அணுகுதல் முக்கியமானது. இவர்களின் நடத்தைகள் , பண்புகள் , செயற்பாடுகளின் காரணங்கள் சரியாக அறியாவிட்டாலும் உளவியல் ரீதியில் அணுகினால் மனநிலையை மாற்றலாம்,
சரியான முறையில் அணுகாவிட்டால் எதிர்கால விளைவுகள் :
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முதல் வகையினர் வளர்ந்த பின்பு நிம்மதியைத் தேடி , அலைந்து ,முறையற்ற வழியில் இன்பம் காணமுற்படுவார்கள். தவறான பாலியல் நடவடிக்கைகள், குடிப்பழக்கம், ஹெரோயின் , கஞ்சா , போதை மாத்திரைகள் போன்ற மருந்துகளை உடலில் பாய்ச்சுதல் போன்றவற்றால் உலக சிந்தனைகளிலிருந்து விடுபட்டு அழுத்தமற்ற மனநிலையுடன் இன்பத்தை அனுபவிக்கிறார்கள் இதற்கு அடிமையானவர்கள் இந்த இன்பத்திலிருந்து விடுபடமாட்டார்கள். பணம் அற்ற நிலையில் கொள்ளையடித்தல் , பிறரைத்துன்புறுத்தல் , கொலைகள் போன்ற வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
இரண்டாவது வகையினர் வாழ்க்கையில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளைச் சமாளிக்கமாட்டார்கள். தோல்விகளைத் தாங்கும் மனநிலை இவர்களுக்கு இருக்கமாட்டாது எதற்கும் பயப்படுதல் , யோசித்தல் கவலைப்படுதல் , கண்ணீர் வடித்தல் , ஏங்குதல் இவர்களின் பண்பாகும். சிலர் மனநிலை பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுத் தவிப்பார்கள்.
சுயநலத்தால் ஒருசிலர் வாழ்வில் நிம்மதி இன்றி அலைந்து பிறரின் வாழ்விற்கும் இடையூறாக அமைவார்கள்.
ஆசிரியர்களின் பங்களிப்பு :
பல்வேறு மனநிலையுடன் நாடிவரும் குழந்தைகளை நேரடியாகக் கையாளுபவர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும், தொடக்க பள்ளி ஆசிரியர்களும் ஆவர். கல்வியில் மட்டுமல்லாமல் அவர்கள் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பு இவர்களிடம் தான் உள்ளது.
பொறுமையுடன் அன்பு காட்டி குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து ஆழமாக ஆராய்ந்து அறிந்து நெறிப்படுத்தக் கூடிய மனநலம் சம்பந்தமான அறிவும் பயிற்சியும் அவசியமானதாகும்.
பெற்றோரின் பங்கு :
குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்தே தங்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .அவர்களின் வாழ்வே இவர்களுக்கு முன்னுதாரணம் .சண்டை ,சச்சரவு இல்லாத ஒற்றுமையான கணவன் மனைவி உறவே குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது வாழ்க்கை முறைகள், ஒழுக்கம் , அன்பு , இரக்கம் , தாய் தந்தை சகோதர பாசம் , குடும்ப உறவுகளை பேணல் போன்றவற்றை சொல்லி கொடுப்பதுடன் பிள்ளைகளிடம் மனம் திறந்து உரையாடுவது ,அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுதல் ,பெற்றோர்களின் அன்பை குழந்தைகளுக்கு புரிய வைத்தல் போன்றவை மிக மிக முக்கியமானது
நல்ல பெற்றோரும்,கல்வி சூழலும் ,ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குகிறது ,
Comments
Post a Comment