தமிழர் கலைகளை வளர்க்கும் அரசுப் பள்ளி!
தமிழர் கலைகளை வளர்க்கும் அரசுப் பள்ளி!
தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழரின் பாரம்பரியக் கலைகள் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகின்றன.
தமிழக அரசு இந்த ஆண்டு ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது. அவற்றில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் ‘இலக்கை நிர்ணயித்தல்’ என்ற தலைப்பில் சிலம்பாட்டம், பறையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட தமிழர் கலைகள் குறித்த பாடம் உள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தை தஞ்சை அருகே பூண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியானது சிலம்பாட்டம், பறையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட தமிழர் கலைகள், செயல்முறை விளக்கத்துடன் கற்பித்துவருகிறது. மாணவர்களுக்கு புரொஜக்டர் திரை மூலமாக கலைகள் குறித்த வீடியோக்களை ஒளிபரப்பி ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வகுப்பிலேயே அவர்களை மேடையேற்றி அரங்கேற்றம் செய்யவும் வைக்கின்றனர்.
கலைகள் குறித்துப் பயிற்சியளிக்கத் துறை சார்ந்த கலைஞர்கள் வெளியிலிருந்து வரவழைக்கப்படுகின்றனர். மாணவர்களில் யாருக்கேனும் ஏதேனும் கலை குறித்துத் தெரியும் என்றால் அவர்களைக் கொண்டே அந்தக் கலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
செயல்முறை விளக்கத்தின் மூலம் கற்பிக்கப்படுவதால் இந்தக் கலைகளை மாணவர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்வதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.