தமிழக அறிவியலறிஞர் விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு
2016, 2017 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்டுள்ளது.
வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம் என 10 துறைகளின் கீழ் சிறந்து விளங்கும் அறிவியலறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விருது ரூ. 50,000 ரொக்கப் பரிசையும், ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியதாகும். அந்த வகையில், 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இந்த விருதைப் பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை இந்த மன்றம் திங்கள்கிழமை வெளியிட்டது.
2016 ஆம் ஆண்டுக்கான விருதை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.நக்கீரன் (வேளாண்மையியல்), சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.மதிவாணன் (உயிரியல்), பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.ரமேஷ் (வேதியியல்), பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கண்மணி (பொறியியல் தொழில்நுட்பம்), திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய கல்வி நிறுவனப் பேராசிரியர் ஆர்.உதயகுமார் (கணிதவியல்), கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ்.வெற்றிவேல் செழியன் (மருத்துவயியல்), அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.ஜெயவேல் (இயற்பியல்), தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி.ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோர் பெறுகின்றனர்.
2017-ஆம் ஆண்டுக்கான விருதை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ரவீந்திரன் (வேளாண்மையியல்), சென்னை ஐஐடி பேராசிரியர் எம்.மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கருப்பசாமி (வேதியியல்), அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), ஆவடி ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் (ஓய்வு) பி.சிவகுமார் (பொறியியல் தொழில்நுட்பம்), அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.அன்பழகன் (கணிதவியல்), சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் மற்றும் தலைவர் ஆர்.லட்சுமி நரசிம்மன் (மருத்துவயியல்), பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ஜெகந்நாதன் (இயற்பியல்), கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் உயர்கல்வி நிறுவனப் பேராசிரியர் எஸ்.கௌசல்யா (சமூகவியல்) ஆகியோர் பெறுகின்றனர்