+ 2 முடித்தாலே வேலை கிடைக்கும் வகையில் 'ஸ்கில் ட்ரெயினிங் '
+ 2 முடித்தாலே வேலை கிடைக்கும் வகையில் 'ஸ்கில் ட்ரெயினிங் ' என்ற புதிய பாடத்திட்டம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
பிளஸ்-2 முடித்த உடனே வேலைக் கிடைக்கும் வகையில் ஸ்கில் டிரெய்னிங் என்ற புதிய பாடத்திட்டம் இணைக்கப்படும்’ என்று
அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் சென்ற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ்-2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 59 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ‘விருது’ வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், ``ஆசிரியர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருக்கிறது. கையில் குச்சி இருந்தாலேபோதும் ஆசிரியர்களின் நிலை அவ்வளவுதான். பெற்றோர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பதில்லை. இவற்றைத் தடுக்க ‘பயோ மெட்ரிக்’ திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். சரியான நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா?. சரியான நேரத்தில் வீட்டுக்குத் திரும்புகிறார்களா என்பது குறித்து பெற்றோர்களின் செல்போனுக்கு ‘குறுஞ்செய்தி’ அனுப்பப்படும். இதுவரை 500 பள்ளிகளில் ‘பயோ மெட்ரிக்’ கொண்டுவரப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் ஆயிரம் பள்ளிகளில் வைக்கப்படும். மாணவர்களிடம் விஞ்ஞான வளர்ச்சியை உருவாக்குவதற்கு ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் என்ற முறையில் 671 பள்ளிகளில் ‘அறிவியல் லேப்’ அமைக்கும் பணிகள் டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும்.
‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு 413 மையங்களில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். மார்ச் மாதத்திற்குப் பிறகு ப்ளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் உடனடியாக சி.ஏ. எழுதப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 500 ஆடிட்டர்கள் தயார் செய்திருக்கிறோம். இலவசமாக அவர்கள் மாணவர்களுக்கு சி.ஏ. பயிற்சியைக் கற்றுத்தருவார்கள்.