தமிழகத்தில் 471 அரசுப்பள்ளிகளில் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம்
தமிழகம் முழுவதும் 471 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் 2017-18ம் ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு சாரா பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பாராட்டு விழா நேற்று விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல், கலெக்டர் ராமன், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ ரவி வரவேற்றார். வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், 'இந்தாண்டு 59 பள்ளித்தலைமை ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி காட்டியுள்ளனர்.இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி சதவீதம் உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகளை நெறிமுறைபடுத்தி சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்' என்றார்.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு சாரா பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு கேடயம், ரொக்கப்பரிசுகளை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் 471 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளது. நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 500 சிறப்பு ஆசிரியர்களை கொண்டு சி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசுப்பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கும் சுத்திகரிப்பு உபகரணங்கள் கொண்ட 1000 புதிய வாகனங்கள் வாங்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினிகள் மூலம் பாடம் நடத்தப்படும். புதிய பாடதிட்டங்களை செல்போன் செயலி மூலமாக பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி அனைத்து பாடங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்